அமலாக்கத்துறைக்கு அளவு கடந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி மீது அசோக் கெலாட் கடும் தாக்கு!


அமலாக்கத்துறைக்கு அளவு கடந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி மீது அசோக் கெலாட் கடும் தாக்கு!
x

அமலாக்கத் துறைக்கு அதிகளவு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசை ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் குற்றம் சாட்டினார்.

ஜெய்ப்பூர்,

போலீஸ் துறைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை விட அமலாக்கத் துறைக்கு அதிகளவு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசை ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் குற்றம் சாட்டினார்.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் பேசியதாவது:-

அமலாக்கத்துறை யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் என்ற அளவுக்கு அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் அமலாக்க துறைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அமலாக்கத்துறை கைது செய்வதற்கு முன் விளக்கம் கூட அளிக்க தேவை இல்லை, யாரை வேண்டுமானாலும் கைது செய்து கொள்ளலாம் என்ற நிலை உள்ளது.

நாட்டில் ஒரே மதம் என்பதை நோக்கிய அரசியல் போக்கு நிலவுகிறது. நம் தேசம் இதற்கு முன் இப்படி ஒரு அரசியலை பார்த்ததில்லை. இதனைக் கண்டு மக்கள் கவலையடைந்துள்ளனர்.ஆனால் அதை எதிர்த்து பேசுவதற்கு அச்சம் அடைந்துள்ளனர். அமலாக்க துறையின் விசாரணை எப்போது வேண்டுமானாலும் தங்கள் மீது பாயலாம் என்று அச்சப்படுகின்றனர்.

சமீப காலங்களில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த பலர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவர் இவ்வாறு பேசினார்.

ராஜஸ்தான் மாநிலம் உதைப்பூரில் தையல் கன்னையாலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பாரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பெரும் பதற்றம் நிலவியது. இந்த நிலையில் அப்போது தான் பிரதமரிடம் தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடுத்தும், அந்த வன்முறை சம்பவம் குறித்து அமைதி காக்கும்படி பொதுமக்களிடம் பிரதமர் கேட்டுக் கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

உதைப்பூர் படுகொலை சம்பவத்துக்கு பின் உடனடியாக அதில் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டனர். இல்லையென்றால் மாநிலம் முழுவதும் பெரும் கலவரம் ஏற்பட்டிருக்கும். நான் அதை தடுத்தேன். பிரதமர் இவ்விவகாரத்தில் தலையிட்டு மக்களிடம் அமைதிக்காக்குமாறு கூற வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். ஆனால் அவர் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை என்று கூறினார்.

மேலும் பிரதமர் மக்களை கைத்தட்டி உற்சாகப்படுத்துமாறு கொரோனா சமயத்தில் கூறினார். ஆனால் அமைதி காக்கும் படியும், வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்றும் கூறவில்லை. பிரதமர் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை, பயனற்ற திட்டம் என வர்ணித்துள்ளார்.

ஆனால் மக்கள் கூட்டம் கூட்டமாக கொரோனா ஊரடங்கு காலத்தில் மாநிலம் விட்டு மாநிலம் பயணித்த போது, அவர்கள் தங்கள் சொந்த ஊர்களில் பிழைக்க, நாங்கள்(காங்கிரஸ்) கொண்டுவந்த இந்த திட்டம் தான் உதவிகரமாக இருந்தது என்பதை நினவில் கொள்ள வேண்டும்.

அக்னிபாத் திட்டம் ஒரு வேடிக்கையான விஷயம். ஏனெனில் 24 வயதில் அக்னிவீரர்கள் ஓய்வு பெற்ற பின், மேற்கொண்டு என்ன செய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.

ராஜஸ்தானில் அமைதி மற்றும் வன்முறை தடுப்புத் துறை ஒன்று உருவாக்கப்பட உள்ளது. இதற்காக மாநில அரசின் சார்பில், தனி அமைச்சகம் அல்லது துறை உருவாக்கப்படும் என்று கூறினார்.


Next Story