பா.ஜனதாவின் நட்சத்திர பேச்சாளராக அமலாக்கத்துறை உள்ளது - மல்லிகார்ஜுன கார்கே


பா.ஜனதாவின் நட்சத்திர பேச்சாளராக அமலாக்கத்துறை உள்ளது - மல்லிகார்ஜுன கார்கே
x

கோப்புப்படம்

தினத்தந்தி 7 Nov 2023 11:32 PM GMT (Updated: 8 Nov 2023 5:58 AM GMT)

இரண்டாவது நபரான சி.பி.ஐ., எதிரணி வேட்பாளர்களை பலவீனப்படுத்த முயன்று வருவதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

குவாலியர்,

பா.ஜனதாவுக்கு ஒவ்வொரு தொகுதிக்கும் 4 வேட்பாளர்கள் உள்ளனர் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

இதுதொடர்பாக குவாலியரில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "காங்கிரசுக்கெல்லாம் தொகுதிக்கு ஒரு வேட்பாளர்தான் இருக்கிறார். ஆனால், பா.ஜனதாவுக்கு ஒவ்வொரு தொகுதிக்கும் 4 வேட்பாளர்கள் உள்ளனர். கண்ணுக்கு தெரிந்த பா.ஜனதா வேட்பாளர் ஒருவர். கண்ணுக்கு தெரியாத மேலும் 3 வேட்பாளர்கள் உள்ளனர்.

முதல் நபரான அமலாக்கத்துறை, பிரதமர் மோடியை போல் பா.ஜனதாவின் நட்சத்திர பேச்சாளராக பிரசாரம் செய்து வருகிறது. 2-வது நபரான சி.பி.ஐ., எதிரணி வேட்பாளர்களை பலவீனப்படுத்த முயன்று வருகிறது. 3-வது வேட்பாளர், வருமானவரித்துறை ஆகும். இந்த 3 பேரைத்தவிர, பிரதமர் மோடி, முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் என 5 பேரும் பஞ்ச பாண்டவர்கள் போல் உள்ளனர். நம்மை தோற்கடிக்க முயற்சிக்கின்றனர். அவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.

சத்தீஷ்காரில் தேர்தல் நடந்து வரும் நிலையில், அங்குள்ள காங்கிரஸ் தலைவர்களையும், முதல்-மந்திரியையும் அமலாக்கத்துறை அச்சுறுத்தி வருகிறது. இது, ஜனநாயகம் அல்ல. சமமான போட்டி அல்ல. நாட்டுக்கு காங்கிரஸ் என்ன செய்தது என்று பா.ஜனதா கேட்கிறது. நாங்கள் நாட்டையும், அரசியல் சட்டத்தையும் பாதுகாத்ததால்தான், அவர்களால் முதல்-மந்திரி ஆக முடிந்தது.

பா.ஜனதா தலைவர்கள், சுதந்திரத்துக்காக போராடாமல், ஆங்கிலேயர்கள் பக்கம் நின்றனர். காங்கிரஸ் போராடாவிட்டால், நாட்டின் நிலைமை வேறுமாதிரி இருந்திருக்கும். இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி ஆகியோர் நாட்டுக்காக உயிர் நீத்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு சாதியினரின் எண்ணிக்கையை அறிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்" என்று மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.


Next Story