இரட்டை இலை சின்னம் கேட்டு எடப்பாடி பழனிசாமி மனு - சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை


இரட்டை இலை சின்னம் கேட்டு எடப்பாடி பழனிசாமி மனு - சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
x

இரட்டை இலை சின்னம் கேட்டு எடப்பாடி பழனிசாமி மனு சுப்ரீம் கோர்ட்டில் நாளை (திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

புதுடெல்லி,

அ.தி.மு.க.வில் தலைமை பதவியை கைப்பற்றுவது யார்? என்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வெளியானது.

தனி நீதிபதி முதலில் அளித்த தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும், 2 நீதிபதிகள் பின்னர் அளித்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் இருந்தன. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து , இரு அணிகளும் தனித்தனியாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. இதனால் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. இரு அணிகளும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இருந்த போதிலும் இரு அணிகளும் தேர்தல் பணிக்குழுக்களை அமைத்து, தேர்தலுக்கான பணிகளை தொடங்கிவிட்டன.

இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க கோரி இடைக்கால தீர்ப்பு அளிக்க வேண்டும் என பழனிசாமி தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டது. இந்த இரண்டு வழக்குகளும் 30-ந் தேதி நாளை (திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகிறது. இதனால் அரசியல் களத்தில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பெயரில் சுப்ரீம் கோர்ட்டில் இதுவரை வாதிட்ட அத்தனை அம்சங்களையும் திரட்டி திங்கட்கிழமை முறையிட எடப்பாடி பழனிசாமி அணியினர் தயாராகி வருகிறார்கள். மூத்த வக்கீல் அரிமா சுந்தரம், வக்கீல் பாலாஜி சீனிவாசன் உள்ளிட்டோர் இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.


Next Story