எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: ஆர்.எஸ்.பாரதி பதில் மனு - இன்று விசாரணை


எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: ஆர்.எஸ்.பாரதி பதில் மனு - இன்று விசாரணை
x

டெண்டர் முறைகேடு விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யுமாறு ஆர்.எஸ்.பாரதி பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

புதுடெல்லி,

அ.தி.மு.க. ஆட்சியில் நெடுஞ்சாலைப்பணிகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்ட டெண்டர் ஒப்பந்தத்தில் சுமார் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக தி.மு.க. குற்றம்சாட்டியது.

இதுகுறித்து கடந்த 2018-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இதுகுறித்து சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு, சி.பி.ஐ. விசாரிக்க இடைக்கால தடை விதித்து கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டது.

இன்று விசாரணை

இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படாமல் கடந்த 4 ஆண்டுகளாக நிலுவையில் இருந்துவந்தது. இதற்கிடையே இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்குமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கோரிக்கை விடுத்தது.

இதனை ஏற்று 4 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜூலை 26-ந்தேதி வழக்கு விசாரிக்கப்பட்டு ஆகஸ்டு 3-ந்தேதிக்கு (இன்று) தள்ளி வைக்கப்பட்டது.

தள்ளுபடி செய்ய கோரிக்கை

இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டில் ஆர்.எஸ்.பாரதி சார்பில் வக்கீல் விவேக் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு வழக்கை சி.பி.ஐ. நியாயமாக விசாரித்தால் மனுதாரர் எடப்பாடி பழனிசாமிக்கு அவமதிப்பு ஏற்படாது. நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட வேண்டிய அவசியமில்லை.

உலக வங்கி வழிகாட்டுதல்களுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி அவரது உறவினர்களுக்கு ரூ.4,833 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் வழங்கி ஆதாயம் அடையும் வகையில் செயல்பட்டு, அரசுக்கு இழப்பீட்டை ஏற்படுத்தி உள்ளார்.

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு சரியே. நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு எதிரான எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இது விவகாரம் தொடர்புடைய மனுக்களை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு இன்று (புதன்கிழமை) விசாரிக்கிறது.


Next Story