இந்தியை ஐ.நா.வில் அதிகாரப்பூர்வ மொழியாக அங்கீகரிக்க முயற்சி: மத்திய மந்திரி ஜெய்சங்கர் தகவல்


இந்தியை ஐ.நா.வில் அதிகாரப்பூர்வ மொழியாக அங்கீகரிக்க முயற்சி:  மத்திய மந்திரி ஜெய்சங்கர் தகவல்
x
தினத்தந்தி 27 Oct 2022 3:21 PM GMT (Updated: 27 Oct 2022 5:22 PM GMT)

இந்தியை ஐ.நா. அமைப்பில் அதிகாரப்பூர்வ மொழியாக அங்கீகரிக்க செய்யும் முயற்சி நடந்து வருகிறது என மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் இன்று கூறியுள்ளார்.


புதுடெல்லி,


டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பில் (யுனெஸ்கோ) இந்தி மொழி பயன்பாடு பற்றி உங்களுக்கு தெரியும்.

அதன் தலைமையகத்தில் இந்தி பயன்பாடு இருப்பது பற்றி கவனத்தில் கொண்டு, அவர்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை நாம் ஏற்படுத்தி உள்ளோம். அவர்கள் சமூக ஊடகம் மற்றும் அறிக்கைகளில் இந்தியை பயன்படுத்தி வருகின்றனர்.

தொடர்ந்து இதனை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற சிறிது காலம் எடுக்கும். ஐ.நா. அமைப்பில் ஒரு மொழியை அறிமுகப்படுத்துவது என்பது அவ்வளவு எளிது அல்ல.

அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அதில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்த பணியானது அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லப்படும் என்பது எங்களுடைய எதிர்பார்ப்பு என்று அவர் கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், விஷ்வ இந்தி திவாஸ் என்ற பெயரிலான சின்னம் மற்றும் வலைதளம் ஆகியவற்றையும் அவர் அறிமுகப்படுத்தினார். அவருடன் மத்திய வெளிவிவகார இணை மந்திரி முரளீதரன், பிஜி நாட்டின் கல்வி, பாரம்பரியம் மற்றும் கலை அமைச்சகத்துக்கான நிரந்தர செயலாளர் அஞ்ஜீலா ஜோகன் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


Next Story