டெல்லி வந்தார் எகிப்து அதிபர் சிசி - இன்று பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை


டெல்லி வந்தார் எகிப்து அதிபர் சிசி - இன்று பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை
x

கோப்புப்படம்

குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் எகிப்து நாட்டின் அதிபர் சிசி டெல்லி வந்தார். இன்று அவர் பிரதமர் மோடியுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

புதுடெல்லி,

இந்திய திருநாட்டின் 74-வது குடியரசு தின விழா, இந்த ஆண்டு கொரோனா தொற்றை கட்டுப்படுத்திய நிலையில், நாளை மிகுந்த எழுச்சியுடனும், கோலாகலத்துடனும் நடைபெறுகிறது.

டெல்லியில் நடைபெறும் விழாவுக்கான ஏற்பாடுகள் இறுதிகட்டத்தை எட்டி உள்ளன. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி (வயது 68) அழைக்கப்பட்டார். நமது நாட்டின் குடியரசு தின விழாவுக்கு எகிப்து அதிபர் ஒருவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கலந்துகொள்வது இதுவே முதல் முறை ஆகும். அது மட்டுமின்றி குடியரசு தின அணிவகுப்பில் எகிப்து படைப்பிரிவும் கலந்துகொள்கிறது.

டெல்லி வந்தார் சிசி

குடியரசு தின விழாவில் கலந்துகொள்வதற்காக எகிப்து அதிபர் சிசி 3 நாள் பயணமாக நேற்று டெல்லி வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு மத்திய வெளியுறவுத்துறை ராஜாங்க மந்திரி ராஜ்குமார் ரஞ்சன் சிங் மற்றும் மூத்த அதிகாரிகள் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த வரவேற்பில் பாரம்பரிய நாட்டுப்புற நடனமும் இடம் பெற்றது.

சிசியுடன் எகிப்து நாட்டின் 5 மந்திரிகளும், மூத்த அதிகாரிகளும், உயர் மட்ட தூதுக்குழுவும் வந்துள்ளது.

இன்று பிரதமருடன் பேச்சுவார்த்தை

இந்தியா வந்துள்ள எகிப்து அதிபர் சிசிக்கு ஜனாதிபதி மாளிகையில் இன்று சம்பிரதாயபூர்வமான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

எகிப்து அதிபர் சிசியின் வருகை, இந்தியாவுக்கும், எகிப்துக்கும் இடையேயான இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியும், எகிப்து அதிபர் சிசியும் இன்று சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

இரு நாடுகளும் விவசாயம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பான முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது குறிப்பிடத்தக்கது.

இருதரப்பு வர்த்தகம் வளர்ச்சி

இந்தியாவுக்கும், எகிப்துக்கும் இடையேயான வர்த்தகம், 2021-22-ம் ஆண்டில் இதுவரை இல்லாத வகையில் 7.26 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.58 ஆயிரத்து 788 கோடி) அளவுக்கு அதிகரித்துள்ளது. எகிப்துக்கு இந்தியா 3.74 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

இந்தியாவிடம் இருந்து எகிப்து 3.52 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இறக்குமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story