சிவசேனா கட்சி சின்னம் முடக்கம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சிவசேனா கட்சி சின்னம் முடக்கம் செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மும்பை,
மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனாவை உரிமை கோரி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தவ் தாக்கரே தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர்.
இது தொடர்பான மனுக்களை விசாரித்த 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, உத்தவ் தாக்கரே தரப்பினரின் மனுவை தள்ளுபடி செய்தன. மேலும் ஏக்நாத் ஷிண்டே தாக்கல் செய்த கடிதத்தை பரிசீலித்து முடிவு எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர். இந்த நிலையில் அந்தேரி கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் உத்தவ் தாக்கரே அணியும், பா.ஜ.க.வும் களம் இறங்கியுள்ளது.
இந்தநிலையில் ஷிண்டே தரப்பில் இடைத்தேர்தலில் வில்அம்பு சின்னத்தை உத்தவ் தாக்கரே அணிக்கு ஒதுக்க கூடாது என கோரிக்கை வைத்தனர். இந்த மனுவை விசாரித்த தேர்தல் ஆணையம் இரு அணியினரும் கட்சியின் பெயரையோ அல்லது வில்-அம்பு சின்னத்தையோ பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டது.
இதன் மூலம் இரு தரப்பினரும் அந்த சின்னத்தை பயன்படுத்த முடியாது. வில் அம்பு சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டுள்ளது. மேலும் இரு தரப்பினரும் தங்கள் அணிக்கான 3 புதிய பெயர்களை தேர்வு செய்து அனுப்புமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.