நிகில் குமாரசாமி பிரசாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள்
நிகில் குமாரசாமி பிரசாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை தேர்தலில் ராமநகர் தொகுதியில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியின் மகனும், முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனுமான நிகில் குமாரசாமி ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் போட்டியிட உள்ளார். இந்த நிலையில் நேற்று காலையில் அவர் ராமநகர் தொகுதிக்கு உட்பட்ட தொட்டபாதிகெரே கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.
இந்த சந்தர்ப்பத்தில் நிகில் குமாரசாமியிடம் பேசிய ஒரு பெண், எங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகள் குறைபாடு உள்ளது. குடிநீர் வசதி, சாக்கடை வசதி ஆகியவை இல்லை. உங்கள் தாய் (நிகில் குமாரசாமியின் தாய் அனிதா குமாரசாமி) பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த அடிப்படை வசதி பணிகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. எங்கள் கிராமத்தில் எந்தவொரு வளர்ச்சி பணிகளும் நடக்கவில்லை. அதனால் நான் இந்த முறை ஓட்டு போட மாட்டேன்' என்று கூறினார்.
அதேபோல் அங்கு வந்த மற்றொரு பெண்ணும் கூறினார். மேலும் அவர் நீங்கள் எந்தவொரு அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காமல் பிரசாரத்திற்கு மட்டும் வருகிறீர்கள். அதனால் உங்களுக்கு ஓட்டு போடமாட்டேன்' என்று கூறினார்.
அவர்களை சமாதானப்படுத்திய நிகில் குமாரசாமி விரைவில் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதாக கூறினார். தற்போது இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளன.