சித்ரதுர்கா மாவட்டத்தில் பா.ஜனதா-காங்கிரஸ் இடையே 'குஸ்தி'


சித்ரதுர்கா மாவட்டத்தில் பா.ஜனதா-காங்கிரஸ் இடையே குஸ்தி
x

சித்ரதுர்கா மாவட்டத்தில் பா.ஜனதா-காங்கிரஸ் இடையே நேரடி போட்டி ஏற்பட்டு இருக்கிறது.

பெங்களூரு:

சித்ரதுர்கா மாவட்டத்தில் பா.ஜனதா-காங்கிரஸ் இடையே 'குஸ்தி' ஏற்பட்டுள்ளது. சித்ரதுர்கா மாவட்டத்தில் சமபலத்துடன் மோதும் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா ஆகிய இரு தேசிய கட்சிகளும் இந்த முறை கூடுதல் இடங்களை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது.

இங்குள்ள 6 தொகுதிகளில் கடந்த முறை பா.ஜனதா 5 தொகுதிகளையும், காங்கிரஸ் ஒரு தொகுதியையும் கைப்பற்றி உள்ளது. மேலும் தற்போது எம்.எல்.ஏ.க்களாக இருக்கும் நபர்களுக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்க இரு கட்சிகளும் முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சித்ரதுர்கா- ஒலல்கெரே

சித்ரதுர்கா தொகுதியில் பா.ஜனதா கட்சி சார்பில் தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள திப்பரெட்டி மீண்டும் போட்டியிட வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் சார்பில் வீரேந்திரா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த முறை ஜனதாதளம்(எஸ்) சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த முறை காங்கிரசில் சேர்ந்து அக்கட்சி சார்பில் கோதாவில் குதித்துள்ளார். வீரேந்திரா காங்கிரசுக்கு தாவியதால் ஜனதாதளம்(எஸ்) இங்கு பலமான வேட்பாளரை தேடி வருகிறது.

ஒலல்கெரே தொகுதியில் பா.ஜனதா சார்பில் தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள மீண்டும் போட்டியிடலாம் என தெரிகிறது. காங்கிரஸ் சார்பில் கடந்த முறை தோல்வி அடைந்த முன்னாள் மந்திரி ஆஞ்சனேயா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜனதாதளம்(எஸ்) இன்னும் வேட்பாளரை இறுதி செய்யவில்லை.

ஒசதுர்கா- செல்லகெரே

ஒசதுர்கா தொகுதியில் பா.ஜனதா சார்பில் தற்போது எம்.எல்.ஏ. கூலிகட்டி சேகருக்கு மீண்டும் அக்கட்சி வாய்ப்பு வழங்கும் என தெரிகிறது. காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தப்பா போட்டியிடுகிறார். ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் திப்பேசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

செல்லகெரே தொகுதியில் தற்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக உள்ள ரகுமூர்த்தியே மீண்டும் போட்டியிட சீட் ஒதுக்கப்பட்டு உள்ளது. பா.ஜனதா சார்பில் முன்னாள் மந்திரி திப்பேசாமியின் மகன் கிருஷ்ணசுவாமி நிறுத்தப்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. கடந்த முறை ஜனதாதளம்(எஸ்) சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ரவீசுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இரியூர்- முலகால்மூரு

இரியூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரியும் தற்போதைய முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சுதாகர் மீண்டும் போட்டியிட உள்ளார். பா.ஜனதா சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. பூர்ணிமாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது. ஜனதாதளம்(எஸ்) சார்பில் யசோதா டிக்கெட் கேட்டு வருகிறார்.

முலகால்மூருவில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஸ்ரீராமுலு. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் மந்திரிசபையில் போக்குவரத்து துறை மந்திரியாக இருக்கும் இவர், இந்த முறை முலகால்மூரு தொகுதியில் போட்டியிடுவது சந்தேகம் தான். பா.ஜனதா சார்பில் இங்கு போட்டியிட பலர் டிக்கெட் கேட்டு வருகிறார்கள். காங்கிரஸ் சார்பில், என்.ஒய்.கோபாலகிருஷ்ணா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கூட்லகி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்த அவர், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அக்கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் தான் காங்கிரசில் சேர்ந்தார். அவருக்கு காங்கிரஸ் வாய்ப்பு வழங்கி உள்ளது.

சித்ரதுர்கா மாவட்டத்தில் சமபலம் வாய்ந்த 2 தேசிய கட்சிகள் மோதுவதால் அங்கு யார் கை ஓங்கும்? என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்து உள்ளது.


Next Story