பெண் வேட்பாளர்களை புறக்கணிக்கும் மண்டியா மாவட்டம்?
மண்டியா மாவட்டத்தில் பெண் வேட்பாளர்களை அனைத்து கட்சிகளும் புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது.
பெங்களூரு:
மண்டியா மாவட்டத்தில் மத்தூர், கே.ஆர்.பேட்டை, மலவள்ளி, மேல்கோட்டை, ஸ்ரீரங்கப்பட்டணா, மண்டியா, நாகமங்களா ஆகிய 7 தொகுதிகள் உள்ளன. இதில் தற்போது ஆண்கள் மட்டுமே வேட்பாளராக களமிறங்கி வருகிறார்கள். முன்பு பெண்களும் இந்த தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
ஸ்ரீரங்கப்பட்டணா தொகுதியில் தான் அதிக பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி வாகை சூடியுள்ளனர். இந்த தொகுதியில் அதிகபட்சமாக விஜயலட்சுமி பண்டி சித்தேகவுடா 3 முறை போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். 1972-ம் ஆண்டு தமயந்தி போரேகவுடா முதல் முறையாக இந்த தொகுதியில் போட்டியிட்டு 7,139 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை ருசித்தார்.
பின்னர் 1986-ம் ஆண்டு விஜயலட்சுமி பண்டிசித்தேகவுடாவும், 1989-ம் ஆண்டு தமயந்தி போரேகவுடாவும், 1994-ல் விஜயலட்சுமி பண்டி சித்தேகவுடாவும், 1999-ல் பர்வதம்மா ஸ்ரீகண்டய்யாவும், 2004-ம் ஆண்டு விஜயலட்சுமி பண்டி சித்தேகவுடாவும் வெற்றி வாகை சூடியுள்ளனர்.
அதுபோல் மத்தூர் தொகுதியில் 1984-ம் ஆண்டு ஜெயவாணி மஞ்சேகவுடாவும், 2009-ல் கல்பனா சித்தராஜும், மண்டியா தொகுதியில் 1997-ம் ஆண்டு பிரபாவதி ஜெயராமும், 1989-ம் ஆண்டு மலவள்ளி தொகுதியில் இருந்து மல்லஜம்மாவும், 2004-ம் ஆண்டு எம்.கே.நாகமணியும் போட்டியிட்டு வெற்றிக்கொடி நாட்டியுள்ளனர்.
மொத்தமுள்ள 7 தொகுதிகளில் மண்டியா, ஸ்ரீரங்கப்பட்டணா, மத்தூர், மலவள்ளி தொகுதிகளில் மட்டுமே பெண்கள் போட்டியிட்டுள்ளனர். மீதமுள்ள மேல்கோட்டை, நாகமங்களா, கே.ஆர்.பேட்டை தொகுதிகளில் இதுவரை பெண்கள் வேட்பாளராக நிறுத்தப்படவில்லை. மேலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெண் எம்.எல்.ஏ.க்கள் யாருக்கும் மந்திரி பதவி கிடைக்கவில்லை. 1994-ம் ஆண்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற விஜயலட்சுமி பண்டி சித்தேகவுடா ஜே.எச்.பட்டேல் முதல்-மந்திரியாக இருந்த போது மாநில கைவினைப்பொருட்கள் மேம்பாட்டு கழக தலைவியாகவும், மல்லேஜம்மா அம்பேத்கர் மேம்பாட்டு கழக தலைவியாகவும் இருந்துள்ளனர்.
இதுபோல் நாடாளுமன்ற தேர்தலை எடுத்துக்கொண்டால், மண்டியா நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று நடிகை ரம்யா எம்.பி.யாக இருந்தார். தற்போது மண்டியா தொகுதி எம்.பி.யாக நடிகை சுமலதா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2004-ம் ஆண்டுக்கு பிறகு மண்டியா தொகுதியில் ஆண்களே சட்டசபை தேர்தலில் களமிறங்கி வருகிறார்கள். பெண்கள் இந்த தொகுதிகளில் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். தற்போது நடைபெற உள்ள தேர்தலிலும் பெண்களுக்கு எந்த கட்சியும் டிக்கெட் கொடுக்கவில்லை.