சிக்பள்ளாப்பூரில் கால் பதிக்குமா பா.ஜனதா?
சிக்பள்ளாப்பூரில் பா.ஜனதா கால் பதிக்குமா என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
பெங்களூரு:
சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் 5 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு காங்கிரஸ் 4 தொகுதிகளிலும், ஜனதாதளம்(எஸ்) கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் இங்கு போட்டியிட்டு அடிக்கடி மண்ணை கவ்வி விடுகிறார்கள். கடந்த 2019-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரசில் இருந்து விலகிய சுதாகர் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை பலம்வாய்ந்த வேட்பாளர்களை இறக்கி சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் கால்பதிக்க அக்கட்சி மேலிடம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. வருகிற தேர்தலில் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் யார், யார்? எந்த தொகுதிகளில் போட்டியிட ஆர்வமாக உள்ளனர்? என்பது குறித்த நிலவரத்தை இங்கு பார்ப்போம்.
சிக்பள்ளாப்பூர்-கவுரிபித்தனூர்
சிக்பள்ளாப்பூர் தொகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சுதாகர். பின்னர் 2019-ம் ஆண்டு அவர் கட்சி மீதான அதிருப்தியில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததுடன் காங்கிரசில் இருந்து விலகி, பா.ஜனதாவில் சேர்ந்தார். இதையடுத்து சிக்பள்ளாப்பூர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு சுதாகர் வெற்றி பெற்றார். தற்போது அவர் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மந்திரிசபையில் சுகாதார துறை மந்திரியாக உள்ளார். இந்த தேர்தலில் அவர் மீண்டும் பா.ஜனதா சார்பில் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. காங்கிரஸ் சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. ஜனதாதளம் (எஸ்) கட்சி, கடந்த முறை தோல்வி அடைந்த பச்சேகவுடாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கி உள்ளது.
கவுரிபித்தனூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிவசங்கர ரெட்டி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். வருகிற தேர்தலில் இவரே மீண்டும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். சிக்பள்ளாப்பூர் மாவட்டத்திலேயே கவுரிபித்தனூர் தொகுதியில் மட்டும் தான் பா.ஜனதா சற்று பலம்வாய்ந்து உள்ளது. இதனால், டிக்கெட் கேட்டு முன்னாள் எம்.எல்.ஏ. ஜோதி ரெட்டி, மாவட்ட பா.ஜனதா முன்னாள் தலைவர் ரவி நாராயணரெட்டி, கடந்த முறை சுயேச்சையாக களம்கண்ட ஜெய்பால்ரெட்டி ஆகியோர் பா.ஜனதா மேலிடத்தை நாடியுள்ளனர். இங்கு ஜனதாதளம்(எஸ்) சார்பில் கடந்த முறை தோல்வி அடைந்த நரசிம்மமூர்த்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாகேபள்ளி
கர்நாடக-ஆந்திர எல்லையில் உள்ள பாகேபள்ளி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சுப்பாரெட்டி எம்.எல்.ஏ.வாக உள்ளார். இந்த முறையும் காங்கிரஸ் அவருக்கே வாய்ப்பு வழங்கி உள்ளது.
நடிகர் சாய் குமார், அரக்கெரே கிருஷ்ணரெட்டி ஆகியோர் பா.ஜனதா சார்பிலும், முன்னாள் எம்.எல்.ஏ. ஸ்ரீராமரெட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பிலும் களம்காண ஆர்வமாக இருக்கிறார்கள். ஜனதாதளம்(எஸ்) சார்பில் நாகராஜ் ரெட்டி களம் காண்கிறார்.
சிந்தாமணி-சிட்லகட்டா
சிந்தாமணி தொகுதியில் ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த கிருஷ்ணாரெட்டி தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இவர் மீண்டும் அக்கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார். கடந்த முறை தோல்வியடைந்த எம்.சி.சுதாகருக்கு காங்கிரஸ் மீண்டும் வாய்ப்பு வழங்கி உள்ளது.
சிட்லகட்டா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக உள்ளவர் வி.முனியப்பா. இந்த முறை அவருக்கே வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது. கடந்த முறை தோல்வி அடைந்த ரவிக்குமார் மீண்டும் ஜனதாதளம்(எஸ்) சார்பில் களம் காண்கிறார். மேலும், சிந்தாமணி, சிட்லகட்டா தொகுதிகளில் பா.ஜனதாவும் பலம்வாய்ந்த வேட்பாளரை களம் இறக்க முயற்சி மேற்கொண்டுள்ளது.