அரசியல் ஒலிபெருக்கி
கர்நாடக அரசியல் தலைவர்கள் தெரித்த கருத்துகளை இங்கு காண்போம்.
பெங்களூரு:
சித்தராமையாவுக்காக நான் அடி வாங்கினேன்
சித்தராமையா என்னை பற்றி ஒருமையில் பேசுகிறார். அவர் கடந்த 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட்டார். அப்போது என் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அவருக்கு எதிராக போராடினர். அந்த சமயத்தில் அங்கு காரில் சென்ற என்னை சிலர் தாக்கி கார் கண்ணாடியை உடைத்தனர். மேலும் எனது சட்டையையும் கிழித்து எறிந்தனர். இதனை எதிர்கொண்டு அவருக்காக அப்போது வேலை செய்தேன். ஆனால் அவர் இப்போது ஒருமையில் பேசுகிறார். இதுதான் அவருக்கும், எனக்கும் இருக்கும் வித்தியாசம்
- வி.சோமண்ணா, வீட்டு வசதித்துறை மந்திரி.
லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர் முதல்-மந்திரி ஆவார்
சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 130 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். முதல்-மந்திரியாக லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர் அமருவார். ஆனால் ஒரு சமுதாயத்தால் ஆட்சி அமையாது. லிங்காயத், வீரசைவா, ஒக்கலிகர் உள்பட அனைத்து சமுதாயத்தினரும் ஆதரவு தேவை. யாருடைய நெற்றியில் முதல்-மந்திரி என எழுதப்பட்டு இருக்கிறதோ, அவரே முதல்-மந்திரியாக பதவி ஏற்பார்.
-பி.சி.பட்டீல், மந்திரி,
எங்கள் கட்சியின் நட்சத்திர பேச்சாளர் ஜெகதீஷ் ஷெட்டர்
ஜெகதீஷ் ஷெட்டர் எங்கள் தலைவர். அவர் காங்கிரசின் நட்சத்திர பேச்சாளர் ஆவார். அவரை வீழ்த்த பா.ஜனதாவினர் சதி செய்கிறார்கள். ஆனால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. இந்த அரசு 20 நாட்கள் மட்டுமே ஆட்சியில் இருக்கும் என்று லட்சுமண் சவதி, ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோர் கூறியுள்ளனர். அதற்கு முன் முதல்-மந்திரி பதவியை பசவராஜ்பொம்மை ராஜினாமா செய்தால் நல்லது. மாநிலத்தில் பா.ஜனதா என்ற அணை உடைந்துவிட்டது.
-டி.கே.சிவக்குமார், கர்நாடக காங்கிரஸ் தலைவர்
இலவசம் மூலம் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் முயற்சி
இலவச திட்டங்கள் மூலம் கர்நாடகத்தில் ஆட்சியை பிடித்துவிடலாம் என காங்கிரஸ் கணக்கு போடுகிறது. இதன் மூலம் நீண்ட காலமாக நாட்டில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், ஏழைகளை ஏழைகளாக இருக்க விரும்புகிறது. பா.ஜனதா சிறுபான்மையினருக்கு எதிரானது என கூறும் காங்கிரஸ் கட்சி, அவர்களுக்காக இதுவரை எதையும் செய்யவில்லை. கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சிக்கு வரும்.
- பி.எஸ்.ஒய்.விஜயேந்திரா, பா.ஜனதா வேட்பாளர்