விஜயநகரை கைப்பற்ற காங்கிரஸ்-பா.ஜனதா இடையே போட்டா போட்டி


விஜயநகரை கைப்பற்ற காங்கிரஸ்-பா.ஜனதா இடையே போட்டா போட்டி
x
தினத்தந்தி 24 April 2023 6:45 PM GMT (Updated: 24 April 2023 6:46 PM GMT)

விஜயநகரை கைப்பற்ற காங்கிரஸ்-பா.ஜனதா இடையே போட்டா போட்டி ஏற்பட்டு உள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தின் கல்யாண கர்நாடக பகுதியில் அமைந்துள்ள மாவட்டம் விஜயநகர். கடந்த 2021-ம் ஆண்டு பல்லாரியில் இருந்து பிரிந்து மாநிலத்தின் 31-வது மாவட்டமாக விஜயநகர் உதயமானது. விஜயநகர பேரரசின் தலைநகரான ஹம்பி இங்கு தான் அமைந்துள்ளது. இது பாரம்பரிய நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. மாவட்டத்தில் பல்வேறு வரலாற்று நினைவு சின்னங்கள் அமைந்துள்ளது.

போட்டா போட்டி

விஜயநகர் மாவட்டத்தை பொறுத்தவரை விவசாயம் தான் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு கன்னடம் பேசும் மக்களுக்கு அடுத்தப்படியாக தெலுங்கு பேசும் மக்கள் கணிசமாக வசிக்கிறார்கள். பல்லாரியில் இருந்து பிரிக்கப்பட்ட பிறகு விஜயநகர் மாவட்டத்தின் கீழ் விஜயநகர், கூவினஹடஹள்ளி, அகரிபொம்மனஹள்ளி, கூட்லகி, ஹரப்பனஹள்ளி ஆகிய 5 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த சட்டசபை தேர்தலில் பல்லாரி மாவட்டத்துடன் இந்த தொகுதிகள் இருந்தன. இந்த 5 தொகுதிகளில் கடந்த முறை காங்கிரஸ் 3 தொகுதிகளையும், பா.ஜனதா 2 தொகுதிகளையும் கைப்பற்றின.

விஜயநகர் மாவட்டத்தை பொறுத்தவரை தேசிய கட்சிகளாக பா.ஜனதா-காங்கிரஸ் தான் சமபலத்துடன் திகழ்கிறது. இங்கு காங்கிரஸ்-பா.ஜனதா இடையே தான் போட்டா போட்டி எழுந்துள்ளது. ஜனதாதளம்(எஸ்) கட்சி விஜயநகர் மாவட்டத்தில் பலவீனமாக காணப்படுகிறது.

விஜயநகர்

தொகுதி மறுசீரமைப்பின்படி ஒசப்பேட்டே தொகுதி கடந்த 2004-ம் ஆண்டுடன் நீக்கப்பட்டு, கடந்த 2008-ம் ஆண்டு தேர்தல் முதல் விஜயநகர் தொகுதி உருவாக்கப்பட்டது. இங்கு 2008, 2013 மற்றும் 2018 ஆகிய 3 சட்டசபை தேர்தல் நடந்துள்ளது. இந்த 3 தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர் ஆனந்த்சிங். கர்நாடக சுற்றுலா துறை மந்திரியாக இருக்கும் ஆனந்த்சிங், கடந்த 2008 மற்றும் 2013-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் கடந்த 2018-ம் ஆண்டு பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்து அக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இதையடுத்து ஆனந்த்சிங் கடந்த 2019-ம் ஆண்டு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் பா.ஜனதாவுக்கே திரும்பி வந்துவிட்டார். 2019-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று மந்திரியாக உள்ளார்.

பல்லாரி மாவட்டத்தில் இருந்து பிரிந்து விஜயநகர் தனி மாவட்டமாக உருவெடுக்க முக்கிய காரணமாக திகழ்ந்தவர் ஆனந்த்சிங். இவரின் முயற்சியால் தான் விஜயநகர் தனி மாவட்டமாகி உள்ளது. ஆனால் இந்த முறை ஆனந்த்சிங்கிற்கு பா.ஜனதா டிக்கெட் கொடுக்கவில்லை. அவருக்கு பதிலாக விஜயநகர் தொகுதியில் ஆனந்த்சிங்கின் மகன் சித்தார்த் சிங்கிற்கு பா.ஜனதா வாய்ப்பு வழங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த முறை தோல்வி அடைந்த கவியப்பாவுக்கு மீண்டும் டிக்கெட் வழங்கி உள்ளது. ஆம் ஆத்மி கட்சி சார்பில் சங்கரதாசா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஹரப்பனஹள்ளி-கூட்லகி

ஹரப்பனஹள்ளி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கருணாகர ரெட்டி. இவர், முன்னாள் மந்திரியும், சுரங்க அதிபரும், கல்யாண ராஜ்ஜிய பிரகதி கட்சி தலைவருமான ஜனார்த்தன ரெட்டியின் சகோதரர் ஆவார். இவருக்கே பா.ஜனதா மீண்டும் டிக்கெட் வழங்கி உள்ளது. காங்கிரஸ் சார்பில் கோட்ரேசும், ஆம் ஆத்மி சார்பில் நாகராஜாவும் களத்தில் உள்ளனர்.

கூட்லகி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்.ஒய்.கோபாலகிருஷ்ணா. இவர் சமீபத்தில் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். கோபாலகிருஷ்ணா, காங்கிரஸ் சார்பில் முலகால்மூரு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கூட்லகி தொகுதியில் காங்கிரஸ் கட்சி என்.டி.சீனிவாஸ் என்பவரை களமிறக்கி உள்ளது. பா.ஜனதா சார்பில் லோகேஷ் நாயக் போட்டியிடுகிறார். ஆம் ஆத்மி கட்சி சார்பில் என்.சீனிவாஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அகரி பொம்மனஹள்ளி-கூவினஹடஹள்ளி

அகரிபொம்மனஹள்ளி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. வாக இருப்பவர் பீமா நாயக். இவருக்கே காங்கிரஸ் கட்சி மீண்டும் வாய்ப்பு வழங்கி உள்ளது. பா.ஜனதா சார்பில் ராமண்ணா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஹமனுந்தய்யா என்பவர் களம் காண்கிறார்.

கூவினஹடஹள்ளி தொகுதியில் காங்கிரசின் பரமேஸ்வர் நாயக் எம்.எல்.ஏ.வாக உள்ளார். சித்தராமையா மந்திரிசபையில் தொழில்துறை மந்திரியாக இருந்த இவர், மீண்டும் காங்கிரஸ் சார்பில் கூவினஹடஹள்ளி தொகுதியில் போட்டியிடுகிறார். பா.ஜனதா கட்சி கிருஷ்ணா நாயக் என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது. ஆம் ஆத்மி சார்பில் ஸ்ரீதர் நாயக் என்பவர் களமிறங்கி உள்ளார். ஜனதாதளம்(எஸ்) கட்சி புத்ரேஷ் என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது.

பா.ஜனதா-காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவினாலும் புதிய மாவட்டமான விஜயநகரை கைப்பற்ற போவது யார் என்பைத பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Related Tags :
Next Story