பொம்மனஹள்ளி தொகுதியில் பா.ஜனதா-காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்


பொம்மனஹள்ளி தொகுதியில் பா.ஜனதா-காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்
x

பொம்மனஹள்ளி தொகுதியில் பா.ஜனதா - காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

பெங்களூரு:

பெங்களூரு பொம்மனஹள்ளி தொகுதியில் குல்பர்கா காலனி உள்ளது. அந்த காலனியில் நேற்று முன்தினம் இரவு வாக்காளர்களுக்கு பா.ஜனதா கட்சியினர் சேலை வழங்குவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டு கூறினார்கள். இதுபற்றி தேர்தல் அதிகாரிகளுக்கும், காங்கிரஸ் தொண்டர்கள் புகார் அளித்தனர். உடனே குல்பர்கா காலனிக்கு தேர்தல் அதிகாரிகள் விரைந்து வந்தனர். அப்போது அங்குள்ள சாலையோரம் 50-க்கும் மேற்பட்ட சேலைகள் கிடந்தது. பின்னர் குல்பர்கா காலனியில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அங்கும் 80 சேலைகள் இருந்தது. இதையடுத்து, அந்த சேலைகளை பறிமுதல் செய்து பொம்மனஹள்ளி போலீசார் எடுத்து சென்றார்கள். இந்த விவகாரம் தொடர்பாக குல்பர்கா காலனியில் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இருகட்சியினரும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டதுடன், வாக்குவாதமும் செய்தார்கள். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. இதுபற்றி தகவல் அறிந்ததும் பொம்மனஹள்ளி போலீசார் விரைந்து வந்து பா.ஜனதா, காங்கிரஸ் தொண்டர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தார்கள்.

1 More update

Related Tags :
Next Story