பயங்கரவாதத்தை ஆதரிப்பது தான் காங்கிரசின் வரலாறு; தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கடும் தாக்கு


பயங்கரவாதத்தை ஆதரிப்பது தான் காங்கிரசின் வரலாறு; தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கடும் தாக்கு
x
தினத்தந்தி 2 May 2023 6:45 PM GMT (Updated: 2 May 2023 6:46 PM GMT)

பயங்கரவாதத்தை ஆதரிப்பது தான் காங்கிரசின் வரலாறு என்று பிரதமர் மோடி கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

சித்ரதுர்கா:

பயங்கரவாதத்தை ஆதரிப்பது தான் காங்கிரசின் வரலாறு என்று பிரதமர் மோடி கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

பிரசார பொதுக்கூட்டம்

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் தனது பிரசாரத்தை கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி தொடங்கினார். அதைத்தொடர்ந்து மறுநாள் 30-ந் தேதியும் ஓட்டு சேகரித்தார். பீதர், விஜயாப்புரா, பெலகாவி, பெங்களூரு, கோலார், ராமநகர், மண்டியா, மைசூரு ஆகிய நகரங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டம் மற்றும் ஊர்வலத்தில் பங்கேற்று பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

அதைத்தொடர்ந்து 30-ந் தேதி அவர் மைசூருவில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். ஒரு நாள் இடைவெளிக்கு பிறகு பிரதமர் மோடி நேற்று மீண்டும் கர்நாடகம் வந்து 2-ம் கட்ட பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி சித்ரதுர்காவுக்கு வந்தார். சித்ரதுர்கா மற்றும் ஒசப்பேட்டே ஆகிய இடங்களில் நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-

கண்ணீர் வடிந்தது

காங்கிரஸ் கட்சியின் வரலாறு மற்றும் சிந்தனைகளை கர்நாடக மக்கள் மறக்க கூடாது. காங்கிரசின் வரலாறு, பயங்கரவாதத்தையும், பயங்கரவாதிகளையும் ஆதரிப்பது தான். டெல்லியில் பாட்லா ஹவுஸ் பகுதியில் தாக்குதல் நடைபெற்றபோது, பயங்கரவாதிகள் இறந்ததை கண்டு அக்கட்சியின் தலைவரின் கண்களில் கண்ணீர் வடிந்தது.

பாகிஸ்தான் மீது நாம் துல்லிய தாக்குதல் நடத்தியபோது, காங்கிரஸ் கட்சி நமது ராணுவ வீரர்களின் திறன் குறித்து கேள்வி எழுப்பியது. காங்கிரஸ் கட்சி பயங்கரவாதத்தை ஊக்கப்படுத்துகிறது. காங்கிரஸ் கர்நாடகத்தை பயங்கரவாதிகளின் கருணை பகுதியாக மாற்றி விட்டனர். பா.ஜனதாவின் பயங்கரவாதிகளை ஒடுக்கியது. நாங்கள் காங்கிரசின் பயங்கரவாதிகளை கவரும் அரசியலை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம்.

காங்கிரஸ் உறுதி

வளமான கர்நாடகத்தை, முதன்மை மாநிலமாக உருவாக்க வேண்டியது அவசியம். இது தான் கர்நாடகத்தை பாதுகாக்கும். காலாவதியான காங்கிரஸ் கட்சி பொய்களை கூறுகின்றன. கர்நாடகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை ஒரு முழுமையான திட்டம் ஆகும்.

நான் அனுமன் மண்ணிற்கு வந்துள்ளேன். இந்த அனுமன் மண்ணிற்கு வருகை தரும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். அதே நேரத்தில் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் அனுமனுக்கு பூட்டு போட்டுள்ளது. முதலில் அந்த கட்சியினர் ராமருக்கு பூட்டு போட்டனர். அதன் பிறகு ஜெய் பஜ்ரங் பாலி என்று கோஷமிடுபவர்களை தடை செய்ய காங்கிரஸ் உறுதி எடுத்துள்ளது.

பா.ஜனதா அனுமதிக்காது

காங்கிரசுக்கு கடவுள் ராமருடன் பிரச்சினை இருந்தது. இது நமது நாட்டின் துரதிருஷ்டம். தற்போது அந்த கட்சிக்கு பஜ்ரங்தள அமைப்பு பிரச்சினையாக உள்ளது. கர்நாடகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். ஹனுமனின் காலை தொட்டு இந்த உறுதிமொழியை நான் ஏற்கிறேன். கர்நாடகத்தின் கலாசாரம், பெருமைக்கு களங்கம் விளைவிக்க யாரையும் பா.ஜனதா அனுமதிக்காது.

விஜயநகர் பேரரசு மற்றும் அதன் வரலாறு இந்தியாவின் பெருமை ஆகும். கிருஷ்ணதேவராயர் தனது திறமையான ஆட்சியால் வளங்களை கொண்டு இந்த பகுதியை மேம்படுத்தினார். அவர் பல்வேறு நாடுகளுடனான நல்லுறவை வலுவடைய செய்தார். கர்நாடகத்தின் கலாசாரத்தை உலகறிய செய்தார்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


Related Tags :
Next Story