துமகூருவில் டிரைவரின் ஒரு ஓட்டுக்காக 300 கிலோ மீட்டர் தூரம்; பயணித்த கர்நாடக அரசு பஸ்
துமகூருவில் டிரைவரின் ஒரு ஓட்டுக்காக 300 கிலோ மீட்டருக்கு கர்நாடக அரசு பஸ் பயணித்த சம்பவம் நடந்துள்ளது.
துமகூரு:
துமகூருவில் டிரைவரின் ஒரு ஓட்டுக்காக 300 கிலோ மீட்டருக்கு கர்நாடக அரசு பஸ் பயணித்த சம்பவம் நடந்துள்ளது.
அரசு பஸ் டிரைவர்
கர்நாடக சட்டசபைக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றிருந்தது. 18 வயது நிரம்பியவர்கள் முதல் 100 வயதை கடந்தவர்கள் கூட தேர்தலில் ஓட்டுப்போட்டு ஜனநாயக கடமையாற்றி இருந்தனர். மேலும் அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்தும், பெங்களூருவில் வசித்து விட்டு சொந்த ஊருக்கு கோடை விடுமுறையில் தமிழ்நாட்டுக்கு சென்றிருந்த தமிழர்கள் கூட ஒருநாள் வந்து ஓட்டுப்போட்டு விட்டு சென்றதை பார்க்க முடிந்தது.
இந்த நிலையில், கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்தில் (கே.எஸ்.ஆர்.டி.சி) டிரைவராக பணியாற்றுபவர் ஓட்டுப்போட்டுவதற்காக 300 கிலோ மீட்டருக்கு அரசு பஸ்சை இயக்கிய சம்பவம் துமகூருவில் நடந்துள்ளது. துமகூரு மாவட்டம் ஹூலியார் தாலுகா தம்மடிஹள்ளி அருகே கொல்லரஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கய்யா. இவர், கே.எஸ்.ஆர்.டி.சி.யில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கொல்லரஹட்டியிலேயே சிவலிங்கய்யாவுக்கு ஓட்டு உள்ளது.
ஓட்டுப்போட அரசு பஸ்
நேற்று முன்தினம் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களை, அரசு பஸ்சில் அழைத்து சென்று வாக்குச்சாவடியில் விடும் பணியில் சிவலிங்கய்யா ஈடுபட்டு இருந்தார். இதையடுத்து, சிக்கநாயக்கனஹள்ளியில் இருந்து ஆந்திர மாநில எல்லையில் உள்ள பாவகடா தாலுகாவில் ஒரு கிராமத்தில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிக்கு, ஊழியர்களை அரசு பஸ்சில் அழைத்து சென்றிருந்தார்.
இதனால் அவர் ஓட்டுப்போட முடியாமல் தவித்தார். பின்னர் துமகூரு மாவட்ட அரசு போக்குவரத்து கழக தலைமை அதிகாரிக்கும், தேர்தல் அதிகாரிக்கும் தான் ஓட்டுப்போட விரும்புவது பற்றி சிவலிங்கய்யா தெரிவித்தார். இதையடுத்து, சிவலிங்கய்யா ஓட்டுப்போடுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி, போக்குவரத்து கழக அதிகாரிக்கு, தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
300 கிலோ மீட்டர் இயக்கம்
இதையடுத்து, துமகூரு மாவட்டம் துருவகெரேயில் காலையிலேயே வாக்களித்துவிட்டு, பஸ் ஓட்டும் பணியில் ஈடுபட்டு இருந்த டிரைவர் சேத்தனை, சிவலிங்கய்யாவை பாவகடாவில் இருந்து, அவரது சொந்த கிராமத்திற்கு அழைத்து செல்லும்படி உத்தரவிடப்பட்டது. அதைத்தொடர்ந்து, அரசு பஸ்சில் சிவலிங்கய்யாவை ஏற்றிக் கொண்டு சேத்தன் அழைத்து சென்றார். 4 மணிநேர பயணத்திற்கு பின்பு சொந்த கிராமத்திற்கு சிவலிங்கய்யா சென்று ஓட்டுப்போட்டு ஜனநாயக கடமையாற்றி இருந்தார்.
அதன்பிறகு, கொல்லரஹட்டி கிராமத்தில் இருந்து பெங்களூருவுக்கு பஸ்சை ஓட்டி செல்லும்படி அதிகாரிகள் கூறியதால், சிவலிங்கய்யா சென்ற பஸ் பெங்களூருவுக்கு வந்தது. ஒட்டுமொத்தமாக சிவலிங்கய்யாவின் ஒரு ஓட்டுக்காக 300 கிலோ மீட்டருக்கு பயணிகளை ஏற்றாமல் அரசு பஸ் ஓட்டப்பட்டு இருந்தது. ஒரு ஓட்டின் மகத்துவம் என்ன? என்பதை விளக்கும் விதமாக இந்த சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.