ஜனதாதளம்(எஸ்) 'கிங்மேக்கர்' ஆக மாறும்; மாநில தலைவர் சி.எம்.இப்ராகீம் பேட்டி


ஜனதாதளம்(எஸ்) கிங்மேக்கர் ஆக மாறும்; மாநில தலைவர் சி.எம்.இப்ராகீம் பேட்டி
x
தினத்தந்தி 13 May 2023 12:15 AM IST (Updated: 13 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஜனதா தளம்(எஸ்) கட்சி கிங் மேக்கராக மாறும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராகீம் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்றும், காங்கிரசுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கலாம் என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. இதனால் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைப்பது தொடர்பாகவும், சுயேச்சைகளை வளைக்கவும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.

தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜனதா தலைவர்கள் தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆட்சி அமைக்க தேவையான 113 இடங்கள் கிடைக்காத பட்சத்தில் ஜனதாதளம் (எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் அல்லது எம்.எல்.ஏ.க்களை இழுக்கலாம் என தகவல் வெளியாகி வருகிறது. இதனால் ஜனதாதளம் (எஸ்) கட்சி வேட்பாளர்களை அக்கட்சி தேசிய தலைவர் தேவேகவுடா போனில் தொடர்பு கொண்டு தேசிய கட்சிகளிடம் விலை போக வேண்டாம் என்றும், அனைவரும் கட்சி உத்தரவின் படி செயல்படவும் அறிவுறுத்தியுள்ளார். அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி ஓட்டுப்பதிவு முடிந்த 10-ந்தேதி நள்ளிரவே சிங்கப்பூர் புறப்பட்டு சென்றுவிட்டார்.

இந்த நிலையில், கருத்துக்கணிப்பு முடிவுகள் பற்றி ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராகீம் பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தேசிய கட்சிகள் பணம் பலத்தை வைத்து கருத்துக்கணிப்புகள் நடத்தி வெளியிட்டு வருகின்றன. எங்களிடம் பண பலம் இல்லை. எனவே தேசிய கட்சிகள் போல் நாங்கள் கருத்துக்கணிப்புகளை நடத்தி வெளியிடவில்லை. கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு அக்கட்சிகள் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஜனதாதளம் (எஸ்) கட்சி குறைந்த தொகுதிகளில் வெற்றி பெறுவதாக கருத்துக்கணிப்புகளில் கூறியுள்ளனர். ஆனால் எங்கள் கட்சி கூடுதல் இடங்களை கைப்பற்றும். ஜனதாதளம் (எஸ்) கட்சி கிங் மேக்கராக மாறும்.எங்கள் வேட்பாளர்களை யாரும் விலை பேச முடியாது. அவர்கள் ஆசைக்கு அடிபணிய மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story