மறுவாக்கு எண்ணிக்கை கோரி பா.ஜனதா வேட்பாளர் வழக்கு


மறுவாக்கு எண்ணிக்கை கோரி பா.ஜனதா வேட்பாளர் வழக்கு
x

மாலூர் தொகுதியில் 248 ஓட்டுகளில் தோல்வி அடைந்த பா.ஜனதா வேட்பாளர் மறுவாக்கு எண்ணிக்கை கோரி கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பெங்களூரு:

மாலூர் தொகுதியில் 248 ஓட்டுகளில் தோல்வி அடைந்த பா.ஜனதா வேட்பாளர் மறுவாக்கு எண்ணிக்கை கோரி கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

248 ஓட்டுகளில் தோல்வி

கோலார் மாவட்டம் மாலூர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் மஞ்சுநாத கவுடா போட்டியிட்டார். அதுபோல் காங்கிரஸ் சார்பில் கே.ஒய்.நஞ்சேகவுடாவும், சுயேச்சையாக ஹூடி விஜயகுமாரும், ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் ராமேகவுடாவும் போட்டியிட்டனர். இதனால் இந்த தொகுதியில் கடும் போட்டி நிலவியது.

வாக்கு எண்ணிக்கையின் போது காங்கிரஸ், பா.ஜனதா, சுயேச்சை வேட்பாளர் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. ஒவ்வொரு சுற்றிலும் 3 பேரும் மாறி மாறி முன்னிலை வகித்தப்படி இருந்தனர். இறுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கே.ஒய்.நஞ்சேகவுடா 248 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் மொத்தம் 50,955 ஓட்டுகள் பெற்றிருந்தார். பா.ஜனதா வேட்பாளர் மஞ்சுநாத கவுடா 50,707 ஓட்டுகளும், சுயேச்சை வேட்பாளர் 49,362 ஓட்டுகளும் பெற்றனர்.

மறு வாக்கு எண்ணிக்கை

ஆனால் ஓட்டு எண்ணிக்கையில் குளறுபடி நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும், எனவே மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கோரியும் பா.ஜனதா வேட்பாளர் மஞ்சுநாத கவுடா தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த அனுமதிக்கப்படவில்லை.

இதனால் அதிருப்தி அடைந்த மஞ்சுநாதகவுடா மாலூர் சட்டசபை தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கோரி கோர்ட்டு உதவியை நாட முடிவு செய்தார்.

ஐகோர்ட்டில் வழக்கு

அதன்படி அவர் நேற்று தனது வக்கீல் மூலம் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் மாலூர் தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் குளறுபடி நடந்திருக்கலாம் என கருதுகிறேன். எனவே மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story