அரியானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 2 லட்சம் பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பு - ராகுல் காந்தி வாக்குறுதி
அரியானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 2 லட்சம் பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்படும் என ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.
சண்டிகர்,
90 உறுப்பினர்களைக் கொண்ட அரியானா சட்டசபைக்கு வருகிற 5-ந்தேதி(நாளை) ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 8-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது. அதே போல் காங்கிரசுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையே கூட்டணி ஏற்படாததால், இரண்டு கட்சிகளும் தனித்தனியே களம் காண்கின்றன. மறுபுறம் ஜனநாயக ஜனதா கட்சியும், ஆசாத் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. எனவே இந்த தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், அரியானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 2 லட்சம் பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்படும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-
"பா.ஜ.க.வால் பரப்பப்பட்ட 'வேலையில்லா திண்டாட்டம்' என்ற நோய், அரியானா இளைஞர்களின் எதிர்காலத்தையும், மாநிலத்தின் பாதுகாப்பையும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது.
இன்று இந்தியாவிலேயே அரியானாவில்தான் வேலையின்மை விகிதம் மிகவும் அதிகமாக உள்ளது. இதற்கு காரணம், கடந்த 10 ஆண்டுகளில் மாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் ஒவ்வொரு அமைப்பின் முதுகெலும்பையும் பா.ஜ.க. உடைத்துவிட்டது.
- தவறான ஜி.எஸ்.டி. மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை சிறு வணிகங்களை முடக்கியது.
- ராணுவத்திற்கு தயாராகும் இளைஞரின் மனஉறுதியை அக்னிவீர் திட்டம் உடைத்தது.
- மோசமான சட்டங்களால் விவசாய தொழில் செய்பவர்களின் தைரியம் தகர்ந்தது.
- விளையாட்டு வீரர்களுக்கான ஆதரவு பறிக்கப்பட்டு அவர்களின் கனவு சிதைக்கப்பட்டது.
இதன் விளைவாக, போதைப் பழக்கத்தால் இளைஞர்களின் திறமை வீணாகிறது. விரக்தியடைந்த இளைஞர்கள் குற்றத்தில் ஈடுபடுகின்றனர்.
அரியானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பின்னர், 2 லட்சம் பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு, அரியானா போதையில்லா மாநிலமாக மாற்றப்படும். மாநிலத்தில் வேலைவாய்ப்புகள் பெருகும் என்றும், அனைத்து குடும்பங்களும் செழிப்பாக இருக்கும் என்றும் அரியானாவின் சகோதரிகளுக்கு நான் உறுதியளித்துள்ளேன்."
இவ்வாறு ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.