ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை; மாநகராட்சி தலைமை கமிஷனர் பேட்டி
அரசு அமைப்புகளின் பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு, பெங்களூருவில் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
அரசு அமைப்புகளின் பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு, பெங்களூருவில் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தெரிவித்துள்ளார்.
23 ஏரிகள் ஆக்கிரமிப்பு
பெங்களூருவில் மழை பாதிப்புகளை தடுக்க ராஜ கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்கும் பணிகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில், பெங்களூரு வளர்ச்சி ஆணையம் (பி.டி.ஏ) 23 ஏரிகளை ஆக்கிரமித்து 3,500-க்கும் மேற்பட்ட வீட்டுமனைகளை விற்பனை செய்திருந்தது. இதன் காரணமாக ஏரிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள், கட்டிடங்களையும் இடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுதவிர குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட பிற அரசு அமைப்புகளே ஏரி நிலங்களை ஆக்கிரமித்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத்திடம் நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
201 ஏரிகளில் ஆக்கிரமிப்பு
பெங்களூருவில் 208 ஏரிகள் உள்ளன. அவற்றில் 201 ஏரிகள் பெங்களூரு மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இவ்வாறு மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஏரி நிலங்கள் கூட ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
சில ஏரிகள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறது. இதுபோல், ஏரிகளை சில அரசு அமைப்புகளே ஆக்கிரமிப்பு செய்திருப்பது பற்றி எனது கவனத்திற்கும் வந்தது. ஏரி நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ள பி.டி.ஏ.வுக்கு, மாநகராட்சி சார்பில் நோட்டீசு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பி.டி.ஏ. அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கருத்து கேட்டு நடவடிக்கை
பெங்களூருவில் ஏரி நிலங்களை பி.டி.ஏ. மட்டும் இல்லாமல் பிற அரசு அமைப்புகளும் ஆக்கிரமிப்பு செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தப்படும்.
அதுபோல், அனைத்து துறை அதிகாரிகளுடனும் ஆலோசிக்கப்படும். அவர்களது கருத்துகளும் பெறப்படும். அதன்பிறகு, ஏரி நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு துஷார் கிரிநாத் கூறினார்.