அரசு வேலை கிடைத்தால் போதும்: பியூன் வேலைக்காக குவிந்த பொறியாளர்கள்


அரசு வேலை கிடைத்தால் போதும்: பியூன் வேலைக்காக குவிந்த பொறியாளர்கள்
x

விண்ணப்பதாரர் பட்டம் பெற்றிருக்கக்கூடாது என்ற விதி இருந்தாலும், பொறியாளர்கள் மற்றும் பி.டெக். பட்டம் பெற்றவர்கள் சைக்கிள் டெஸ்ட்டில் பங்கேற்க வந்திருந்தனர்.

நாட்டில் அரசு வேலைகளுக்கான போட்டித் தேர்வுகளில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக குறைந்த கல்வித் தகுதி கொண்ட அரசு வேலைகளுக்குகூட உயர் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கும் நிலை நீடிக்கிறது. எதாவது ஒரு அரசு வேலை, அதுவும் பணி பாதுகாப்புடன் கூடிய வேலை கிடைத்தால் போதும் என்ற மனநிலையே இதற்கு காரணம்.

அவ்வகையில், கேரளாவில் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பியூன் பணியிடங்களுக்கு உயர் படிப்பு படித்த பலரும் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சைக்கிள் ஓட்டுதல் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.

பியூன் வேலைக்கான ஆரம்ப சம்பளம் மாதம் ரூ.23000 ஆகும். கல்வித் தகுதி 7ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும், சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். இன்னும் ஒரு முக்கியமான கண்டிஷன், விண்ணப்பதாரர் பட்டம் பெற்றிருக்கக்கூடாது. ஆனாலும் பல்வேறு தேர்வு மையங்களில் ஏராளமான பொறியாளர்கள் மற்றும் பி.டெக். பட்டம் பெற்றவர்கள் சைக்கிள் டெஸ்ட்டில் பங்கேற்க வந்திருந்தனர்.

இதுதொடர்பாக தேர்வாணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், "பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்போது பட்டம் பெற்றிருக்கமாட்டார்கள். உறுதிமொழி படிவத்தில் பட்டம் பெறவில்லை என எழுதியிருக்கலாம்" என்றார்.

அதிக கல்வி அறிவு பெற்ற மாநிலம் என பெயர் பெற்ற கேரளாவில், வேலை தேடுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story