மக்களவையில் பேச லஞ்சம்: மஹுவா மொய்த்ரா மீதான பரிந்துரை இன்று தாக்கல்; எம்.பி. பதவி பறிபோகுமா..?


மக்களவையில் பேச லஞ்சம்: மஹுவா மொய்த்ரா மீதான பரிந்துரை இன்று தாக்கல்; எம்.பி. பதவி பறிபோகுமா..?
x

Image Courtacy: PTI

பரிந்துரை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டால் விரிவான விவாதத்துக்கு அனுமதி கேட்கப்படும் என பகுஜன் சமாஜ் எம்.பி. தெரிவித்தார்

புதுடெல்லி,

திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த மஹுவா மொய்த்ரா எம்.பி., அதானி நிறுவனங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சமாக பெற்றதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக நாடாளுமன்ற நெறிமுறைக்குழு மஹுவா மொய்த்ராவிடம் விசாரணை நடத்தியது. இதன் முடிவில் அவரை எம்.பி. பதவியில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரைத்து இருக்கிறது.

தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்த பரிந்துரை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இந்த பரிந்துரை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டால் விரிவான விவாதத்துக்கு அனுமதி கேட்கப்படும் என பகுஜன் சமாஜ் எம்.பி. டேனிஷ் அலி கூறினார். இதைப்போல எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலரும் பெண் எம்.பி.க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் பரிந்துரை அறிக்கைக்கு பெருவாரியான உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தால், மஹுவா மொய்த்ரா எம்.பி. பதவி நீக்கம் செய்யப்படுவார்.

முன்னதாக, இதன்மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 6-4 என்ற கணக்கில் பரிந்துரை நிறைவேறியது. இதன் கூட்டத்தில், மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக 6 பேரும், எதிராக 4 பேரும் வாக்களித்ததால், 6:4 என்ற விகிதத்தில் அவர்மீதான குற்றச்சாட்டுகளை விசாரணைக்குழு ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.


Next Story