காவிரி விவகாரத்தில் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்-குமாரசாமி பேட்டி
காவிரி விவகாரத்தில் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:-
குமாரசாமி
காவிரி நீர் விவகாரத்தில் நேற்று பெங்களூரு விதான சவுதாவில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவருமான குமாரசாமியும் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்பாக விதான சவுதாவில் குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அமைதியாக இருக்க முடியாது
மாநிலத்தின் நிலம், நீர், மொழி குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினால் அது அரசியல் என நினைப்பது தவறு. அப்படி உணரும் கேள்விக்கே இடமில்லை. காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு முன்பு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியிருக்க வேண்டும். இப்போது தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுகிறீர்கள். விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
காவிரி விவகாரத்தில் விவசாயிகள் கோர்ட்டுக்கு செல்ல வேண்டும் என்ற மந்திரி சொல்கிறார். இவ்வாறு பேச அவருக்கு அதிகாரம் கொடுத்தது யார்?. விவசாயிகள் கோர்ட்டு தான் செல்ல வேண்டும் என்றால் எங்களுக்கு அரசு ஏன் தேவை?. இது சரியல்ல. விவசாயிகளுக்கு பிரச்சினை வரும்போது எதிர்க்கட்சிகள் பேசாமல் அமைதியாக இருக்க முடியாது.
ஒன்றிணைந்து போராட வேண்டும்
அண்ணன், தம்பி என்ற கேள்வி இங்கு வரவில்லை. இது விவசாயிகள் மற்றும் தண்ணீர் பிரச்சினை. காவிரி விவகாரத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.
அரசு கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டும். காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் நமது அதிகாரிகள் நல்ல கருத்துகளை எடுத்து கூறினர். தண்ணீர் தட்டுப்பாடு குறித்து விளக்கினர். இதற்கு தமிழக அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து, கூட்டத்தில் இருந்து ெவளிநடப்பு செய்தனர். ஆனால் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தவுடன் தண்ணீர்
திறந்துவிடும் முடிவை எடுக்காமல், அதே வேகத்தில் நாமும் ஆட்சேபனை மனு தாக்கல் செய்திருக்க வேண்டும்.இந்த கூட்டத்தில் என்ன விவாதம் நடத்தினாலும் காவிரி மேலாண்மைஆணையத்திலும், சுப்ரீம் கோர்ட்டிலும் பயனுள்ள வாதத்தை முன்வைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.