சத்தீஷ்கார் சபாநாயகராக முன்னாள் முதல்-மந்திரி ராமன்சிங் தேர்வு
முதல்-மந்திரி விஷ்ணு தேவ் சாய், எதிர்க்கட்சித் தலைவர் சரண்தாஸ் மஹந்த் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர்.
ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இடைக்கால சபாநாயகர் ராம்விச்சார்நேதம் சபையை நடத்தினார்.
முதல்-மந்திரி விஷ்ணு தேவ் சாய், எதிர்க்கட்சித் தலைவர் சரண்தாஸ் மஹந்த் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து சபாநாயகர் தேர்வு நடந்தது. இதில் பா.ஜனதா கட்சியின் மூத்த எம்.எல்.ஏவும், சத்தீஷ்கார் மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான ராமன்சிங் சபாநாயகராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு முதல்-மந்திரி விஷ்ணு தேவ் சாய் மற்றும் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்து தெரிவித்தனர். 71 வயதான ராமன்சிங் 2003 முதல் 2018-ம் ஆண்டுவரை சத்தீஷ்கார் மாநிலத்தில் முதல்-மந்திரியாக இருந்தார். அப்போது பின்தங்கி இருந்த அந்த மாநிலத்தை வளர்ச்சிபெற்ற மாநிலமாக மாற்றிய திறமையான நிர்வாகி என்ற பெயரை பெற்றவர் ஆவார்.
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ராமன் சிங் சபாநாயகர் பதவிக்கு வேட்புமனுவை தாக்கல் செய்தார், மேலும் சத்தீஸ்கர் விதான் சபாவில் அனைவரையும் ஒன்றிணைப்பதே தனது புதிய பொறுப்பு என்று கூறினார்.
ஏழு முறை எம்எல்ஏவாக இருந்த சிங், 2008, 2013, 2018 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் ராஜ்நந்த்கான் தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்றுள்ளார்.