நாடாளுமன்ற தேர்தலில் ருசிகரம்; எதிர், எதிர் வேட்பாளர்களாக முன்னாள் தம்பதி போட்டி


நாடாளுமன்ற தேர்தலில் ருசிகரம்; எதிர், எதிர் வேட்பாளர்களாக முன்னாள் தம்பதி போட்டி
x
தினத்தந்தி 11 March 2024 10:59 AM IST (Updated: 11 March 2024 4:06 PM IST)
t-max-icont-min-icon

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய சவுமித்ரா கான், 2019 நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க.வில் தன்னை இணைத்து கொண்டார்.

பாங்குரா,

நடப்பு ஆண்டில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலானது ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க. ஒருபுறமும், இந்தியா கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தேர்தலை சந்திக்கின்றன.

இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், மேற்கு வங்காளத்தின் பாங்குரா மாவட்டத்திற்கு உட்பட்ட பிஷ்னுபூர் தொகுதியில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளும் முன்னாள் தம்பதியை எதிர், எதிர் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளன.

இந்த தொகுதியில், பா.ஜ.க. சார்பில் இந்த மாத தொடக்கத்தில் சவுமித்ரா கான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் சுஜாதா மொண்டல் வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்டார்.

இவர்கள் இருவரும் திருமணம் செய்து பிரிந்தவர்கள். மொண்டல், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து உறுப்பினராகி, அரசியலில் இறங்கிய பின்னர், கடந்த 2020-ம் ஆண்டு இந்த தம்பதி விவாகரத்து செய்து கொண்டது. 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சுஜாதா தன்னை இணைத்து கொண்டார்.

இதேபோன்று, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய சவுமித்ரா கான், 2019 நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க.வில் தன்னை இணைத்து கொண்டார். இந்த சூழலில், ஒரே தொகுதியில் முன்னாள் தம்பதி இருவரும் எதிரெதிர் வேட்பாளர்களாக களமிறங்குவது ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறது. அவர்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது மக்களின் கைகளிலேயே உள்ளது.

மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, இந்தியா கூட்டணியில் இடம் பெற்றபோதும் காங்கிரஸ் கட்சிக்கு எந்த தொகுதியும் ஒதுக்காமல் மொத்தமுள்ள 42 தொகுதிகளுக்கும் தன்னுடைய வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை நேற்று வெளியிட்டது.

இதுவரை இல்லாத வகையில், பொதுக்கூட்டம் ஒன்றில் அக்கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அக்கட்சியின் பொது செயலாளர் அபிஷேக் பானர்ஜி அதனை நேற்று வெளியிட்டார்.

இதன்படி அபிஷேக் பானர்ஜி, டயமண்ட் ஹார்பர் தொகுதியில் இருந்து போட்டியிடுவார் என தெரிகிறது. கடந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவையில் இருந்து வெளியேற்றப்பட்ட மகுவா மொய்த்ராவுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அவர், கிருஷ்ணா நகர் தொகுதியில் இருந்து அக்கட்சி சார்பில் போட்டியிட உள்ளார்.


Next Story