இந்திய விமான படை வீரர்களின் கண்ணை கவரும் சாகச பயிற்சி காட்சிகள் வெளியீடு
இந்திய விமான படை தினத்தில் வீரர்கள் செய்த சாகச பயிற்சி காட்சிகள் கண்ணை கவரும் வகையில் அமைந்துள்ளன.
சண்டிகர்,
நாட்டில் 90-வது இந்திய விமான படை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டெல்லிக்கு வெளியே முதன்முறையாக பஞ்சாப்பின் சண்டிகர் நகரில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய விமான படை தலைமை தளபதி வி.ஆர். சவுத்ரி கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, அக்னிபாத் திட்டத்தின் கீழ் வீரர்களை சேர்ப்பது என்பது எங்கள் அனைவருக்கும் சவாலானது. ஆனால், இந்திய இளைஞர்களின் ஆற்றலை வார்த்தெடுத்து, தேச சேவைக்கான பணியில் அவர்களை வரைமுறைப்படுத்துவதற்கு எங்களுக்கு கிடைத்த ஒரு சந்தர்ப்பம் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்று பேசியுள்ளார்.
எங்களது பயிற்சி நடைமுறை செயல்பாடுகளை நாங்கள் மாற்றியிருக்கிறோம். இதனால், ஒவ்வொரு அக்னி வீரரும் சரியான திறமைகள் மற்றும் அறிவுடன் கூடிய பயிற்சிகள் கிடைக்க பெற்று, தனது பணியை தொடங்குவார்.
இந்த ஆண்டு டிசம்பரில், தொடக்க நிலை பயிற்சிக்காக 3 ஆயிரம் அக்னிவீரர்களை நாங்கள் படையில் சேர்க்க இருக்கிறோம். வருகிற ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு முதல், அக்னி வீராங்கனைகளை இந்திய விமான படையில் சேர்க்க திட்டமிட்டு உள்ளோம். அதற்கான உட்கட்டமைப்பு உருவாக்க செயல்முறைகள் நடந்து வருகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனை முன்னிட்டு மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் இன்று காலை தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். இந்த தினத்தில், சுக்னா லேக் பகுதியில் வருடாந்திர அணிவகுப்பு மற்றும் விமான சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இதன்படி, அந்த பகுதியில் 80 ராணுவ விமானங்கள் மற்றும் சமீபத்தில் படையில் சேர்க்கப்பட்ட உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இலகு ரக பிரசாந்த் என்ற போருக்கு பயன்படும் ஹெலிகாப்டர் உள்ளிட்ட ஹெலிகாப்டர்கள் என சாகச காட்சிகள் ஒரு மணிநேரம் வரை நடத்தப்பட உள்ளன.
இந்திய விமான படை தினத்தில் வீரர்கள் செய்த சாகச பயிற்சி காட்சிகள் கண்ணை கவரும் வகையில் அமைந்துள்ளன. வீரர்கள் கைகளில் துப்பாக்கிகளை ஏந்தியபடி அணிவகுப்பு நடத்தியபடி, பல்வேறு சாகச காட்சிகளையும் செய்து காண்பித்தனர். இதனை பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்தபடி, இந்திய விமான படை தலைமை தளபதி வி.ஆர். சவுத்ரி தனது குடும்பத்தினருடன் பார்வையிட்டார்.