வாழ்க்கையின் சவால்களை உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும் - ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவுரை


வாழ்க்கையின் சவால்களை உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும் - ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவுரை
x

மாணவர்கள் தற்கொலை குறித்து கவலை வெளியிட்டுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, வாழ்க்கையின் சவால்களை உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நீட் தேர்வுக்காக படித்து வந்த மாணவர்கள் சிலர் சமீபத்தில் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்த விவகாரத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவும் கவலை வெளியிட்டு உள்ளார்.

சத்தீஸ்காரில் பிரம்ம குமாரிகள் அமைப்பு சார்பில் நேற்று நடந்த மாநில அளவிலான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசும்போது, இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நீட் தேர்வுக்காக தயாராகி வந்த சில மாணவர்கள் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.

போட்டி என்பது வாழ்க்கையை அழகுபடுத்தும் ஒரு நேர்மறையான உணர்வாகும். வெற்றியும், தோல்வியும் விளையாட்டின் ஒரு பகுதி ஆகும். ஆனால் தோல்வியில் இருந்து வெற்றிக்கு அழைத்து செல்ல வேண்டும்.

இந்த இளைஞர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு அவர்கள் தன்னம்பிக்கையுடன் முன்னேற உதவுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

போட்டி, மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்றால், அதை நேர்மறையான சிந்தனை மூலம் சமாளிக்க வேண்டும். வாழ்க்கையின் சவால்களை உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். மற்றவர்களிடமிருந்து உத்வேகத்தைப் பெறுவது நல்லது. ஆனால் ஒருவரின் உள்ளுணர்வுடன் தொடர்புகொள்வது அவசியம்.

இந்த விஞ்ஞான யுகத்தில், புத்திசாலித்தனமான சிறார்கள் மனரீதியாக இன்னும் வலுவாக இருக்க வேண்டும். எதிர்மறையான சிந்தனை நம் வாழ்க்கையையும் நம் அருகில் உள்ளவர்களின் வாழ்க்கையையும் சீர்குலைக்கும் திறனைக் கொண்டுள்ளது

சந்திரயான்-3 விண்கலம் மற்றும் விளையாட்டுத்துறை சாதனைகள் மூலம் இந்தியா சிறந்த உயரத்தை எட்டி வருகிறது. அந்தவகையில், இந்திய சூழல் மாறி வருகிறது.

இந்த தொழில்நுட்ப யுகத்தில், குழந்தைகள் கூட செயற்கை நுண்ணறிவு பற்றி பேசும் இந்த நேரத்தில் ஆன்மிகத்துக்காக ஒதுக்கப்பட வேண்டிய நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மக்கள் மின்னணு சாதனங்களிலிருந்து விலகி இருப்பது அவசியம்,

இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார்.

நிகழ்ச்சியில் மாநில கவர்னர் பிஸ்வபூஷன் ஹரிச்சந்திரன், முதல்-மந்திரி பூபேஷ் பாகேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story