போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் இந்தியாவில் 'பேஸ்புக்' முழுமையாக முடக்கப்படும்; கர்நாடக ஐகோர்ட்டு எச்சரிக்கை


போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் இந்தியாவில் பேஸ்புக் முழுமையாக முடக்கப்படும்; கர்நாடக ஐகோர்ட்டு எச்சரிக்கை
x

போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் இந்தியாவில் ‘பேஸ்புக்’ முழுமையாக முடக்கப்படும் என்று கர்நாடக ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெங்களூரு:

குடியுரிமை சட்டம்

கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்தவர் சைலேஷ் குமார். இவர் சவுதிரி அரேபியாவில் கடந்த 25 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். இவர் தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு ஆதரவாக கருத்து பதிவிட்டிருந்தார். இதனால் அவருக்கு செல்போன் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது. இதனால் பயந்துபோன அவர் தனது முகநூல் கணக்கை நிரந்தரமாக நீக்கினார்.

இதற்கிடையே அவரது முகநூல் பக்கத்தில் இருந்து சவுதி அரேபியா மன்னருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து ஒன்று பதிவிடப்பட்டது. இதுதொடர்பாக சைலேஷ் குமாருக்கு சவுதி அரேபியாவில் 15 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இதுகுறித்து அறிந்ததும், மங்களூருவில் உள்ள அவரது மனைவி கவிதா, மங்களூரு போலீசில் புகார் அளித்தார். அப்போது தனது கணவர், முகநூல் பக்கத்தை நிரந்தரமாக நீக்கி விட்டதாகவும், போலி வலைத்தள கணக்கில் இருந்து சவுதி மன்னர் குறித்து அவதூறு கருத்து பதிவிடப்பட்டுள்ளதாகவும் கூறி இருந்தார்.

விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை

இந்த நிலையில் விசாரணையை தொடங்கிய மங்களூரு போலீசார், போலி முகநூல் கணக்கு தொடங்கியது குறித்து முகநூல் நிறுவனத்திடம் கடிதம் வாயிலாக தகவல் கேட்டுள்ளனர். ஆனால், போலீசாருக்கு முகநூல் நிறுவனம் சார்பில் எந்த பதிலும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டில், விசாரணையில் தாமதம் ஏற்படுவதை குறிப்பிட்டு கவிதா, கர்நாடக ஐகோர்ட்டை நாடினார்.

இந்த வழக்கு கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி கிருஷ்ணா தீக்ஷித் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நேரில் ஆஜரான மங்களூரு போலீஸ் கமிஷனர் குல்தீப் குமார் ஜெயின் கூறுகையில், விசாரணைக்காக முகநூல் நிறுவனத்தை நாடியபோது அவர்கள் முறையாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று கூறினார்.

மத்திய அரசுக்கு எச்சரிக்கை

இதையடுத்து நீதிபதி பேசுகையில், போலி கணக்குகள் குறித்து விசாரணை நடத்தும் போலீசாருக்கு உரிய ஒத்துழைப்பு வழங்காமல் இருந்தால், இந்தியாவில் முகநூல் நிறுவனத்தின் செயல்பாடுகள் முழுமையாக முடக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு வெளிநாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய குடிமகன் சைலேஷ் குமார் குறித்த அனைத்து தகவல்களையும் விசாரித்து சீல் வைக்கப்பட்ட ஆவணமாக கோர்ட்டில் சமர்பிக்குமாறு உத்தரவிட்டார்.

மேலும் இந்த வழக்கு தொடர்பான முழுமையான தகவல்களை பெற்று சமர்ப்பிக்காமல் இருந்தால், சம்பந்தப்பட்ட வெளியுறவு துறை செயலாளருக்கு கோர்ட்டு சார்பில் தனிப்பட்ட சம்மன் அனுப்பப்படும் என மத்திய அரசை நீதிபதி எச்சரித்தார். இதையடுத்து அனைத்து ஆவணங்களையும் கோர்ட்டில் முகநூல் நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும் என கூறி, வழக்கு விசாரணையை வருகிற 22-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.


Next Story