பிரபல வாஸ்து ஜோதிடர் கொலை வழக்கில் கைதான 2 பேருக்கும் போலீஸ் காவல் நீட்டிப்பு


பிரபல வாஸ்து ஜோதிடர் கொலை வழக்கில் கைதான 2 பேருக்கும் போலீஸ் காவல் நீட்டிப்பு
x

பிரபல வாஸ்து ஜோதிடர் கொலை வழக்கில் கைதான 2 பேருக்கும், மேலும் 6 நாட்கள் போலீஸ் காவல் நீட்டித்து உப்பள்ளி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

உப்பள்ளி;

பிரபல வாஸ்து ஜோதிடர் கொலை

பாகல்கோட்டை மாவட்டம் போடகிகல்லு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் குருஜி(வயது 59). பிரபல வாஸ்து ஜோதிடரான இவர், தனது குடும்பத்தினருடன் வித்யாநகர் பகுதியில் வசித்து வந்தார்.

கடந்த 5-ந்தேதி சந்திரசேகர் குருஜி, உப்பள்ளி உன்கல் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்தார். அப்போது தங்கும் விடுதி வரவேற்பு அறைக்கு சந்திரசேகர் குருஜியை வரவழைத்து அவரிடம் வேலைப்பார்த்த மஞ்சுநாத், மகாந்தேஷ் ஆகியோர் கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்தனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலை சம்பவம் குறித்து வித்யாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மஞ்சுநாத், மகாந்தேசை கைது செய்தனர். விசாரணையில் முன்விரோதத்தில் சந்திரசேகர் குருஜியை, அவர்கள் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து கைதான 2 பேரும், உப்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது நீதிபதி, 2 பேரையும் 6 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டார். அதன்படி வித்யாநகர் போலீசார், 2 பேரையும் தங்கள் வசம் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர்.

போலீஸ் காவல் நீட்டிப்பு

இந்த நிலையில் நேற்று முன்தினத்துடன் போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில் 2 பேரையும், போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது போலீசார், நீதிபதியிடம் மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து நீதிபதி, 2 பேருக்கும் மேலும் 6 நாட்கள் அதாவது நேற்று முதல் வருகிற 18-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டார்.

இதையடுத்து போலீசார், 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story