விவசாயிகள் போராட்டம்; சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க பஞ்சாப் அரசுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்


விவசாயிகள் போராட்டம்; சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க பஞ்சாப் அரசுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்
x

Image Courtesy : PTI

தலைநகர் டெல்லியை நோக்கி தங்கள் பேரணியை தொடர உள்ளதாக போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

சண்டிகர்,

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தை கைவிட வலியுறுத்தி விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு கடந்த 8, 12, 15 மற்றும் 18 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து 5-வது கட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாயிகளுக்கு மத்திய வேளாண் துறை மந்திரி அர்ஜுன் முண்டா அழைப்பு விடுத்துள்ளார்.

இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தலைநகர் டெல்லியை நோக்கி தங்கள் பேரணியை தொடர உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க பஞ்சாப் அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. போராட்டம் என்ற போர்வையில் இடையூறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஞ்சாப் அரசுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story