டெல்லி ராம்லீலா மைதானத்தில் விவசாயிகள் மகாபஞ்சாயத்து.. மத்திய அரசுக்கு எதிராக முழக்கம்


டெல்லி ராம்லீலா மைதானத்தில் விவசாயிகள் மகாபஞ்சாயத்து.. மத்திய அரசுக்கு எதிராக முழக்கம்
x

மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த மகாபஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

புதுடெல்லி:

விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியை நோக்கிய பேரணியை தொடங்கிய அவர்கள், அரியானா-பஞ்சாப் எல்லைப்பகுதிகளில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் விவசாயிகள் அங்கேயே முகாமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, 2020-21ல் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளில் போராட்டங்களை ஒருங்கிணைத்து நடத்திய சம்யுக்தா கிசான் மோர்ச்சா (எஸ்.கே.எம்.) மத்திய பா.ஜ.க. அரசின் வேளாண் கொள்கைகளுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளது. இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லி ராம்லீலா மைதானத்தில் விவசாயிகளின் மகாபஞ்சாயத்து நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று மகாபஞ்சாயத்து நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த இந்த மகாபஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

விவசாயிகளின் போராட்டத்திற்கு டெல்லி போலீசார் சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளனர். 5000 பேருக்கு மேல் ஒன்றுகூடக் கூடாது, டிராக்டர்களில் வரக்கூடாது, பேரணி நடத்தக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டது.

விவசாயிகளின் போராட்டம் காரணமாக போக்குவரத்து காவல்துறை சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. வாகன ஓட்டிகள் மத்திய டெல்லியை நோக்கி செல்லக்கூடிய சாலைகளில் பயணிப்பதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும், விவசாயிகள் தங்கள் டிராக்டர்-டிராலிகளுடன் டெல்லிக்குள் வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


Next Story