விவசாயிகளின் முழுஅடைப்பு போராட்டம்: பஞ்சாப்பில் பேருந்துகள் இயங்காததால் மக்கள் கடும் அவதி


விவசாயிகளின் முழுஅடைப்பு போராட்டம்: பஞ்சாப்பில் பேருந்துகள் இயங்காததால் மக்கள் கடும் அவதி
x

மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்வோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

புதுடெல்லி,

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லி எல்லையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேவேளை, போராட்டத்தை கைவிடுமாறு விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. 3 கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனால் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில், பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் நாடு தழுவிய அளவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த சம்யுக்தா கிசான் மோர்ச்சா, உள்ளிட்ட விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்தன.

இந்த நிலையில் விவசாயிகளின் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தால் பஞ்சாப்பில் பேருந்துகள் இயங்கவில்லை.

பெப்சு சாலைப் போக்குவரத்துக் கழகம் ( பிஆர்டிசி) , பஞ்சாப் ரோட்வேஸ் உள்ளிட்ட ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தினர் நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் பஞ்சாப்பில் பேருந்துகள் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். குறிப்பாக பேருந்துகள் இல்லாததால் மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்வோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.


Next Story