நாட்டை காக்க எதிர்க்கட்சிகள் ஓரணியில் சேர வேண்டும்; பரூக் அப்துல்லா பேட்டி


நாட்டை காக்க எதிர்க்கட்சிகள் ஓரணியில் சேர வேண்டும்; பரூக் அப்துல்லா பேட்டி
x

நாட்டை காக்க எதிர்க்கட்சிகள் ஓரணியில் சேர வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.

பெங்களூரு:

நாட்டை காக்க எதிர்க்கட்சிகள் ஓரணியில் சேர வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.

வேற்றுமையில் ஒற்றுமை

காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா நேற்று பெங்களூவுக்கு வந்தார். அவர் முதல்-மந்திரி சித்தராமையாவை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார். பின்னர் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவை அவரது இல்லத்தில் பரூக் அப்துல்லா நேரில் சந்தித்து பேசினார். நாட்டில் நிலவும் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர். அதன் பிறகு பரூக் அப்துல்லா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை தன்மை கொண்ட நாடு. இது தான் நான் ஒவ்வொருவருக்கும் கூறும் செய்தி. இந்த தன்மையை நாம் அனைவரும் சேர்ந்து பாதுகாக்க வேண்டும். இது நமது நாட்டின் ஒற்றுமையை பாதுகாக்கும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எதிர்கொள்ள மாநில கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என்ற கருத்துகள் எழுந்து வருகின்றன. பா.ஜனதாவை எதிர்த்து ஒன்று சேருவது அல்ல. நாட்டை காக்க எதிர்க்கட்சிகள் ஓரணியில் சேர வேண்டும்.

எங்களை ஒன்றுபடுத்துகிறது

மதத்தின் பெயரில் நாடு பிளவுபட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? அல்லது நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?. இது பலதரப்பட்ட மக்களை கொண்ட நாடு. கர்நாடகம் விஷயத்தில் எனக்கு பொதுவான விஷயங்கள் எதுவும் இல்லை. காஷ்மீர் விஷயத்தில் தேவேகவுடா குடும்பத்திற்கு ஏதாவது தொடர்பு உள்ளதா?. ஆனால் நாட்டை கட்டமைக்கும் காரணங்கள் எங்களை ஒன்றுபடுத்துகிறது.

நாட்டை ஒன்றுபடுத்த நாங்கள் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறோம். நிதிஷ்குமார் பீகாரில் எதிர்க்கட்சிகள் கூட்டத்தை கூட்டியது முக்கியமானது. நாடாளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை இது ஒன்றுபடுத்தும். என்ன பிரச்சினை இருந்தாலும் ஜனதா தளம்(எஸ்) உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் மெதுவாக ஒன்றாக வந்து சேரும்.

தேர்தல் முக்கியமானது

அனைத்துக்கட்சிகளையும் அரவணைத்து செல்ல வேண்டியது அவசியம். எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு முன்னாள் பிரதமர் தேவேகவுடாவை அழைப்பது முக்கியம். காஷ்மீரில் தேர்தல் நடைபெற வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் நடைபெற வேண்டியது முக்கியமானது. காஷ்மீரில் தேர்தலை நடத்த மறுப்பது ஏன்?. அங்கு தேர்தல் நடந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. தேர்தல் கட்டாயம் நடைபெற வேண்டும் என்று தேர்தல் ஆணையமே கூறியுள்ளது.

ஜனதா தளம் (எஸ்) கட்சியுடன் கூட்டணி சேர்ந்து எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்குமா? என்பது குறித்து கூற முடியாது. ஆனால் இது தானாகவே வெளியே வரும். 'காஷ்மீர் பைல்ஸ்', 'தி கேரளா ஸ்டோரி' போன்ற படங்கள் மக்களை பிளவுபடுத்த எடுக்கப்பட்டது. மக்களை பிளவுபடுத்தும் எந்த விஷயமாக இருந்தாலும் அது நாட்டை, அரசியல் சாசனத்தை அழிக்கும் செயல்.

அனைவருக்கும் சொந்தமானது

இந்தியா நம் அனைவருக்கும் சொந்தமானது. நீங்கள் முஸ்லிமாக இருந்தாலும் சரி, இந்து, கிறிஸ்தவர், சீக்கியராக இருந்தாலும் சரி, கர்நாடக, தமிழ்நாடு, காஷ்மீர், மேற்கு வங்காளம், அசாமை சேர்ந்தவராக இருந்தாலும் சரி நாம் அனைவரும் ஒன்றே. அதனால் இத்தகைய படங்கள் மக்களை பிளவுபடுத்த பயன்படுத்தப்படுகின்றன. இதை செய்கிறவர்கள் நாட்டுக்கு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்துகிறார்கள்.

மரியாதை நிமித்தமாக நான் தேவேகவுடாவை சந்தித்தேன். அவர் பிரதமராக இருந்தபோது, நாட்டின் ஒற்றுமைக்கும், காஷ்மீருக்கு செய்த பணிகளுக்காகவும் நன்றி தெரிவித்தேன். அந்த காலக்கட்டத்தில் காஷ்மீருக்கு வருகை தர தலைவர்கள் பயந்தனர். ஆனால் தேவேகவுடா காஷ்மீருக்கு வந்து திட்டங்களை தொடங்கி வைத்தார். காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கம் என்பதை அவர் உலகிற்கு எடுத்துரைத்தார்.

இவ்வாறு பரூக் அப்துல்லா கூறினார்.

தேவேகவுடா நன்றி

பரூக் அப்துல்லா தன்னை சந்தித்தது குறித்து தேவேகவுடா தனது டுவிட்டர் பதிவில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில், 'எனது அருமை நண்பர் பரூக் அப்துல்லா என்னை சந்தித்து நலம் விசாரித்தார். அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து நாங்கள் விவாதித்தோம். அவருக்கும், காஷ்மீர் மக்களுக்கும் எனது வாழ்த்துக்கள். நான் பிரதமராக இருந்தபோது எனக்கு காஷ்மீர் மக்கள் அதிக அன்பை வழங்கினர்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின்போது உடன் இருந்த குமாரசாமி கூறுகையில், 'தேவேகவுடா போல் ஒருவரை நாடு பிரதமராக பெற்று இருந்தால், இந்தியா-பாகிஸ்தான் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டு இருக்கும் என்று பரூக் அப்துல்லா கூறினார். மாநில கட்சிகள் ஒன்று சேருவது குறித்து சிலா் முயற்சி செய்து வருகிறார்கள். என்ன நடக்கிறது என்பதை நாங்கள் பொறுத்திருந்து பார்க்கிறோம். நாங்கள் காங்கிரசுடன் கூட்டணி சேர முடியுமா?. காங்கிரஸ் எங்களை கணக்கில் எடுத்து கொள்வது இல்லை. காங்கிரஸ் வானில் பறந்து கொண்டிருக்கிறது. நாங்கள் பூமியில் இருக்கிறோம். அவர்களுடன் நாங்கள் விவாதிக்க முடியுமா?. அவர்கள் வலுவடைந்துவிட்டனர். அவர்களுக்கு கர்நாடக மக்கள் முழு ஆதரவு வழங்கியுள்ளனர். மக்கள் தான் காங்கிரசை வானில் இருந்து கீழே கொண்டு வர வேண்டும். அவர்கள் கீழே வரும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டாமா?. அவர்களின் உயரத்திற்கு நாங்கள் வளர முடியுமா?. அதனால் நாங்கள் பூமியில் இருக்கிறோம். காத்திருப்போம்' என்றார்.


Next Story