மாற்றுத்திறனாளி வாலிபரை கிணற்றில் தள்ளி கொன்று தந்தை தற்கொலை


மாற்றுத்திறனாளி வாலிபரை கிணற்றில் தள்ளி கொன்று தந்தை தற்கொலை
x

உடுப்பி அருகே மாற்றுத்திறனாளி வாலிபரை கிணற்றில் தள்ளி கொன்று தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.

உடுப்பி:

மாற்றுத்திறனாளி வாலிபர்

உடுப்பி மாவட்டம் கார்காலா தாலுகா கெர்வாசி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணபூஜாரி (வயது 55), இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் தீபேஷ்(வயது 26) என்ற மகனும் இருந்தார். இதில் தீபேஷ் மாற்றுத்திறனாளி ஆவார். தம்பதியினர், மகனை பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிடையே கிருஷ்ணபூஜாரியின் மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. நீண்ட நாட்கள் ஆகியும் உடல்நலம் குணமாகததால் மும்பைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இதனால் வீட்டில் கிருஷ்ண பூஜாரி மற்றும் அவரது மகன் மட்டும் வசித்து வந்துள்ளனர். மகனின் நிலை, மனைவி உடல்நலக்குறைவால் பாதிப்பால் கிருஷ்ணபூஜாரி மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

கிணற்றில் தள்ளி...

இதனால் மகனை கொன்று தானும் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி நேற்றுமுன்தினம் வீட்டின் அருகில் இருந்த கிணற்றுக்கு மாற்றுத்திறனாளியான தீபேசை அழைத்து சென்று மகன் என்றும் பாராமல் திடீரென கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார். பின்னர் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த அப்பகுதியினர் அஜெகாரு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சோகம்

அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும் மீட்பு படையினர் உதவியுடன் கிணற்றில் மிதந்த தீபேசின் உடலையும், கிருஷ்ண பூஜாரியின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் மாற்றுத்திறனாளி மகனின் நிலைமையைும், மனைவி உடல்நலக்குறைவால் அவதிப்படுவதை பார்த்து மனமுடைந்த கிருஷ்ண பூஜாரி மகனை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து அஜெகாரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story