குடும்ப கவுரவத்தை காப்பாற்ற மருமகளுக்கு விஷம் கொடுத்து கொலை; தாய்மாமன் கைது!


குடும்ப கவுரவத்தை காப்பாற்ற மருமகளுக்கு விஷம் கொடுத்து கொலை; தாய்மாமன் கைது!
x

சிறுமியின் வாயில் வலுக்கட்டாயமாக விஷத்தை ஊற்றி குடிக்கச் செய்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போபால்,

17 வயது சிறுமியின் வாயில் வலுக்கட்டாயமாக விஷத்தை ஊற்றி குடிக்கச் செய்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டம் ரத்தன்புரியா கிராமத்தில் 17 வயது சிறுமி ஒருத்தி இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கூறப்பட்டது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், அதன் அறிக்கைகள் மற்றும் சூழ்நிலை ஆதாரங்களை ஆய்வு செய்த போலீசார், சிறுமியின் தாய் மாமன் மற்றும் அவரது மகன் மீது விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமியை வலுக்கட்டாயமாக விஷம் குடிக்க வைத்து கொலை செய்ததை இருவரும் ஒப்புக்கொண்டனர்.

தன்னுடைய காதலனை அந்த சிறுமி திருமணம் செய்ய விரும்பியதால், தங்கள் குடும்ப கவுரவத்தை காப்பாற்றுவதற்காக அவள் வாயில் விஷத்தை ஊற்றி கொன்றுள்ளனர். மேலும் அவளுடைய ஆடைகளில் திரவம் சிந்தியதும், அவர்கள் ஒரு குழி தோண்டி அவளுடைய ஆடைகளை புதைத்தனர். இதை தொடர்ந்து, அனார் சிங் சோந்தியா(50 வயது) மற்றும் அவரது மகன் பிரு சிங் சோந்தியா (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் அந்த பெண் தனது காதலனுடன் ஓடிவிட்டார். அப்போது அவரது குடும்பத்தினர் சிறுமி காணாமல் போனது குறித்து புகார் அளித்தனர். உடனே போலீசார் அவளை கண்காணித்து மீண்டும் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். மேலும், அந்த சிறுமியின் காதலன் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளான்.

இந்த நிலையில், காதலித்ததற்காக சிறுமியை விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story