பைக்கில் இருந்து கீழே விழுந்த 2 பேரை காப்பாற்ற சென்ற அப்பா-மகன்; நள்ளிரவில் நடந்த துணிகரம்
சத்தீஷ்காரில் பைக்கில் இருந்து கீழே விழுந்த 2 பேரை காப்பாற்றுவதற்காக அப்பா மற்றும் மகன் சென்றபோது அந்த சம்பவம் நடந்தது.
ராய்ப்பூர்,
சத்தீஷ்காரின் ராய்ப்பூர் நகரில் சரஸ்வதி நகர் என்ற பகுதியில் இரவில் சாலை வழியே பைக் ஒன்று சென்றுள்ளது. அதில் 2 பேர் பயணித்துள்ளனர். திடீரென அந்த பைக்கில் இருந்து 2 பேரும் கீழே விழுந்துள்ளனர்.
அவர்களுக்கு பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த அப்பா மற்றும் மகன் இதனை பார்த்திருக்கின்றனர். உடனே, ஓடி சென்று பைக்கில் இருந்து விழுந்தவர்களை காப்பாற்ற முயன்றனர்.
அவர்களுடைய பைக்கை தூக்கி நிறுத்தியுள்ளனர். அப்போது, அந்த 2 பேரில் ஒருவர் பின்னால் சென்று கத்தியை எடுத்துள்ளார்.
இது எதுவும் தெரியாமல், அவர்களுக்கு உதவி விட்டு, அந்த இருவரும் நடந்து சென்றனர். ஆனால், அவர்களில் ஒருவர் இவர்களை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.
இதனை பார்த்த மகன் அந்த இடத்தில் இருந்து ஓடியுள்ளார். ஆனால், அவரது தந்தையை கொள்ளையர்கள் இருவரும் சுற்றி வளைத்து கொண்டனர்.
அவரை கீழே தள்ளியுள்ளனர். அவரை தாக்க முயன்றனர். எனினும், 2 பேரும் கொள்ளையர்களிடம் போராடி தப்பினார்கள். இந்த காட்சிகள் சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி உள்ளன. அதில், பைக் நபர்களில் ஒருவர் பின்னால் ஆட்கள் வருகின்றனரா? என பார்க்கிறார்.
அதன்பின்னர், பைக்கை ஓட்டுபவர் பைக் கீழே விழுவது போன்று வேண்டுமென்றே செய்து பின்னர் 2 பேரும் கீழே விழுகின்றனர். உதவிக்கு சென்ற நபர்களை இவர்கள் கத்தியை காட்டி, வளைத்து மிரட்டும் காட்சிகள் காணப்படுகின்றன. அதன்பின் அவர்கள் தப்பியோடுகின்றனர்.
இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர். எனினும், பைக்கின் எண் மற்றும் அந்த நபர்கள் தெளிவாக தெரியவில்லை. அதனால், அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் யாரும் புகார் அளிக்கவில்லை என அந்த பகுதிக்கு சென்று நேரில் விசாரணை நடத்திய போலீசார் கூறியுள்ளனர்.