பெண் டாக்டர் கொலை சம்பவம்: மருத்துவமனைகளை மூட வேண்டுமா? - கேரள ஐகோர்ட்டு கடும் கண்டனம்


பெண் டாக்டர் கொலை சம்பவம்: மருத்துவமனைகளை மூட வேண்டுமா? - கேரள ஐகோர்ட்டு கடும் கண்டனம்
x

மருத்துவர்களை பாதுகாக்க முடியாவிட்டால் மருத்துவமனைகளை மூட வேண்டுமா? என்று கேரள ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனையில் ஹவுஸ் சர்ஜனாக பணியாற்றி வந்தவர் டாக்டர் வந்தனா தாஸ் (23). கொல்லம் அஜீசியா மருத்துவக் கல்லூரியில் படித்துவந்த வந்தனா தாஸ், பயிற்சியின் ஒரு பகுதியாக கொட்டாரக்கரா தாலுகா மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.

இவர நேற்று இரவு பணியில் இருந்த போது, பூயப்பள்ளி பகுதியில் வீட்டில் தகராறு செய்த சந்தீப் என்ற வாலிபரை போலீசார் மற்றும் அவரது உறவினர்கள் அதிகாலை 4 மணியளவில் மருத்துவ பரிசோதனைக்காக கொட்டாரக்கரா தாலுக்கா மருத்துவமனைக்கு கொண்டு வந்து உள்ளனர்.

ஆசிரியராக பணியாற்றி வந்த சந்தீப் போதை மருந்துக்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது. போதைக்கு அடிமையானதால் வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நேற்று இரவு அவர் வீட்டில் தகராறு செய்து வன்முறையில் ஈடுபட்டதால், வீட்டில் உள்ளவர்கள் போலீசை அழைத்துள்ளனர்.

அப்போது வீட்டில் ஏற்பட்ட பிரச்சனையில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது சந்தீப் மருத்துவமனையிலும் ரகளையில் ஈடுபட்டு உள்ளார். அங்கிருந்தவர்களை தாக்கி உள்ளார். மருத்துவ உபகரணைங்களை உடைத்து உள்ளார்.

அங்கிருந்த கத்திரிக்கோலை எடுத்து மருத்துவமனை ஊழியர்களை தக்கி உள்ளார். இதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் டாக்டர் வந்தனா தாஸ் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலில் 5 இடங்களில் கத்திரிக்கோலால் குத்தப்பட்டு இருந்தது.

பெண் மருத்துவர் உயிரிழந்ததையடுத்து இந்திய மருத்துவ சங்கம் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த சம்பவத்திற்கு டாக்டர்கள் சங்கமான ஐ.எம்.ஏ. கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. மேலும் இந்த வழக்கை கேரள ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

வழக்கு விசாரணையின் போது அரசையும், காவல்துறையையும் நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. இந்த சம்பவத்தில் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறை, அதில் இருந்து முற்றிலுமாக தவறிவிட்டது என்று தெரிவித்த நீதிபதிகள், போலீசாரிடம் துப்பாக்கி இல்லையா? மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது காவல்துறையின் முதன்மை கடமையல்லவா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

குற்றவாளிகளை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லும் போது பாதுகாப்பு வழங்க வேண்டியது நீதிமன்றம் அல்ல, அரசு தான் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மருத்துவர்களை பாதுகாக்க முடியாவிட்டால் மருத்துவமனைகளை மூட வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினர்.

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் போலீசார் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், இந்த சம்பவம் தொடர்பாக கேரள டி.ஜி.பி. உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.




Next Story