பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை; ஓய்வுபெற்ற ராணுவ வீரர் கைது
ெபண் போலீஸ்சுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மங்களூரு:
தட்சிண கன்னடா மாவட்டம் உல்லால் போலீஸ் எல்லைக்குட்பட்ட கும்பலா பகுதியில் பெண் போலீஸ் ஒருவர் வசித்து வருகிறார். அவர் தினமும் தனது ஸ்கூட்டரில் வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பெண் போலீஸ் வழக்கம் போல ஸ்கூட்டரில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பாகம்பிலா பகுதியில் வந்தபோது, அவரது ஸ்கூட்டரை ஒரு நபர் மறித்துள்ளார்.
திடீரென்று அந்த நபர், பெண் போலீஸ்சைரை தொட்டு அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கத்தி கூச்சலிட்டுள்ளார்.
அவரது கூச்சல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள், அந்த நபரை பிடித்து உல்லால் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் பிரசாந்த் என்பதும், ஓய்வுபெற்ற ராணுவ வீரர் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் அக்கம்பக்கத்தினருக்கு தொந்தரவு கொடுத்து வருவதுடன், அடிக்கடி தகராறு செய்து வந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் மீது ஏராளமான புகார்கள் பதிவாகி உள்ளது. இதையடுத்து உல்லால் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாந்தை கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.