பெண் சப்-இன்ஸ்பெக்டருடன் போலீஸ் சூப்பிரண்டு உல்லாசம்
கலபுரகியில் பெண் சப்-இன்ஸ்பெக்டருடன் போலீஸ் சூப்பிரண்டு உல்லாசமாக இருந்தார். அவரை பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கணவர் கையும், களவுமாக பிடித்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு:
கலபுரகியில் பெண் சப்-இன்ஸ்பெக்டருடன் போலீஸ் சூப்பிரண்டு உல்லாசமாக இருந்தார். அவரை பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கணவர் கையும், களவுமாக பிடித்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
கள்ளத்தொடர்பு
கலபுரகி மாவட்டத்தில் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக இருந்து வருபவர் அருண் ரங்கராஜன். இவருக்கும், கலபுரகியில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த பெண்ணின் கணவர் கெம்பண்ணா ஆவார். அவரும் போலீஸ்காரர் ஆவார். இந்த நிலையில், போலீஸ் சூப்பிரண்டு அருண் ரங்கராஜன் மீது கலபுரகி போலீஸ் கமிஷனரிடம், போலீஸ்காரர் கெம்பண்ணா பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அந்த புகாரில் 'போலீஸ் சூப்பிரண்டு அருண் ரங்கராஜனுக்கும் தனது மனைவிக்கும் கடந்த 3 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வருகிறது. இதனை கைவிடும்படி 2 பேரிடமும் கூறி வந்தேன். கடந்த 11-ந் தேதி போலீஸ் குடியிருப்பில் வைத்து அருண் ரங்கராஜனும், எனது மனைவியும் உல்லாசமாக இருக்கும் போது, அவர்களை கையும், களவுமாக பிடித்தேன். அப்போது என்னை கொலை செய்து விடுவதாக அருண் ரங்கராஜன் மிரட்டல் விடுத்தார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி இருந்தார்.
போலீஸ் சூப்பிரண்டு மீது வழக்கு
அந்த புகாரை பெற்றுக் கொண்ட போலீஸ் கமிஷனர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடத்தும்படி ஸ்டேஷன் பஜார் போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, உதவி சப்-இன்ஸ்பெக்டரான பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகவும், அவரது கணவரை மிரட்டியதாகவும் கூறி போலீஸ் சூப்பிரண்டு அருண் ரங்கராஜன் மீது ஸ்டேஷன் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீஸ் சூப்பிரண்டு மீது ஸ்டேஷன் பஜார் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவாகி இருப்பதால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பி வைத்துவிட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகளை போலீசார் எடுப்பார்கள் என்றும் கலபுரகி போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் கலபுரகியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் குறித்து போலீஸ்காரர் கெம்பண்ணா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
வீடியோ ஆதாரம் உள்ளது
எனது மனைவிக்கும், போலீஸ் சூப்பிரண்டு அருண் ரங்கராஜனுக்கும் 3 ஆண்டுக்கும் மேலாக கள்ளத்தொடர்பு இருந்து வருவதை கண்டுபிடித்திருந்தேன். இதற்கு முன்பு ஒருமுறை இந்த விவகாரம் எனக்கு தெரியவந்ததும், எனது மனைவியுடன் உள்ள கள்ளத்தொடர்பை கைவிடும்படி கூறினேன். ஆனால் அவர்கேட்கவில்லை. கடந்த 11-ந் தேதி போலீஸ் குடியிருப்பில் வைத்து 2 பேரும் உல்லாசமாக இருக்கும்போது கையும், களவுமாக பிடித்திருந்தேன்.
அவர்கள் அரைகுறை ஆடைகளுடன், அரை நிர்வாணமாக இருப்பதை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளேன். அந்த வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. அதனை போலீசாரிடம் வழங்கவும் தயாராக இருக்கிறேன். எனது மனைவியை போலீஸ் சூப்பிரண்டிடம் இருந்து மீட்டு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.