பட்டாசு குடோனில் வெடி விபத்து; 3 பேர் பலி


பட்டாசு குடோனில் வெடி விபத்து; 3 பேர் பலி
x

ஹாவேரி அருகே குடோனில் வெல்டிங் பணியின் போது தீப்பிடித்து பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 3 தொழிலாளிகள் உடல் கருகி பலியானார்கள்.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் ஹாவேரி (மாவட்டம்) ஆலதகட்டே கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவர் பட்டாசு குடோன் வைத்துள்ளார். இந்த குடோன் ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் அமைந்துள்ளது. அவர் தமிழ்நாடு விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து பண்டிகை காலங்களில் பட்டாசுகளை வாங்கி வந்து குடோனில் வைத்து விற்பனை செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு அவர் சிவகாசியில் இருந்து 6 லட்சம் டன் பட்டாசுகளை வாங்கி தனது குடோனில் இருப்பு வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று அந்த குடோனின் மாடியில் வெல்டிங் பணி நடந்துள்ளது. இந்த பணியில் அதே பகுதியை சேர்ந்த வாசிம் ஹரிகர் (வயது 32) என்ற தொழிலாளி ஈடுபட்டு இருந்தார்.

அந்த சமயத்தில் வெல்டிங் செய்த போது ஏற்பட்ட தீப்பொறி பட்டாசுகள் மீது விழுந்தது. இதில் பட்டாசுகள் தீப்பிடித்து எறிந்து வெடித்து சிதற தொடங்கியது. உடனே வாசிம் ஹரிகர் தப்பிக்க முதல் மாடியில் இருந்து கீழே குதித்தார்.

இதில் லேசான காயத்துடன் அவர் உயிர் தப்பினார். அவரை அப்பகுதி மக்கள் மீட்டு ஹாவேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பட்டாசுகள் வெடிக்க தொடங்கியதும் அவர் மாடியில் இருந்து கீழே குதித்ததால் தீவிபத்தில் சிக்காமல் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே பட்டாசுகளில் தீப்பிடித்து எரிந்து டமார்.. டமார்... என பயங்கர சத்ததுடன் வெடித்தன. இதனால் கரும்புகையும் தீயும் கொழுந்துவிட்டு எரிந்தன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பட்டாசு குடோனில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 5 மணி நேரம் போராடி தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இருப்பினும் அனைத்து பட்டாசுகளும் எரிந்து நாசமானது. அதுபோல் 4 இருசக்கர வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தது. சேதமான பட்டாசுகளின் மதிப்பு ரூ.1½ கோடி என கூறப்படுகிறது.

இதற்கிடையே தீவிபத்து ஏற்பட்ட பட்டாசு குடோனில் காடேனஹள்ளி கிராமத்தை சேர்ந்த திம்மப்பா ஒலேகாரா, ரமேஷ் பார்கி, சிவலிங்கா அக்கி ஆகிய 3 தொழிலாளர்கள் சம்பவத்தின் போது அங்கிருந்ததாகவும், அவர்களை காணவில்லை என்றும் உறவினர்கள் கூறினர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் முற்றிலும் தீ அணைக்கப்பட்ட பிறகு தீவிபத்து ஏற்பட்ட குடோனுக்குள் சென்று பார்த்தனர். அங்கு 3 பேரும் தீயில் கருகிய நிலையில் பிணமாக கிடந்தனர். அவர்களது உடல்களை போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஹாவேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் கலெக்டர் ரகுந்த மூர்த்தி மற்றும் அதிகாரிகள் வந்து விசாரித்தனர். மேலும் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறுகையில், இந்த பட்டாசு குடோன் அனுமதி பெற்று செயல்பட்டதா என விசாரித்து வருகிறோம். பட்டாசு குடோன் நடத்த உரிமம் இல்லையெனில் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதுதொடர்பாக ஹாவேரி புறநகர் போலீசார், குடோன் உரிமையாளர் குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story