3 மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டதால் தாய்மாமாவின் இறுதிச்சடங்கை தவறவிட்ட பள்ளி ஆசிரியை
3 மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டதால், தாய் மாமாவின் இறுதிச்சடங்கை பள்ளி ஆசிரியை தவறவிட்ட சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு:
3 மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டதால், தாய் மாமாவின் இறுதிச்சடங்கை பள்ளி ஆசிரியை தவறவிட்ட சம்பவம் நடந்துள்ளது.
தனியார் பள்ளி
பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் ரிதுகுமாரி(வயது 38). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ரிதுகுமாரியின் குடும்பத்தினர் அனைவரும் ராஜஸ்தானில் உள்ளனர். இந்த நிலையில் ராஜஸ்தானில் உள்ள அவரது 58 வயதுடைய தாய் மாமா திடீரென உயிரிழந்தார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் ரிதுகுமாரிக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அவரது கணவர் உடனடியாக ரிதுகுமாரி ராஜஸ்தான் செல்வதற்காக ஜெய்ப்பூர் செல்லும் விமானத்தில் ரூ.14 ஆயிரம் கட்டணம் செலுத்தி டிக்கெட் முன்பதிவு செய்தார். இதையடுத்து அவர் நேற்று முன்தினம் காலையில் கெம்பேகவுடா விமான நிலையத்திற்கு சென்றார். பின்னர் காலை 8 மணி அளவில் புறப்பட இருந்த விமானத்திற்காக அவர் காத்திருந்தார். அப்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் தாமதமாக புறப்படும் என ஊழியர்கள் கூறினர்.
தாமதம்
உடனே அவர் இதுகுறித்து விமான நிறுவன ஊழியர்களிடம் கேட்டார். அப்போது திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும், விரைவில் சரிசெய்யப்பட்டு விமானம் புறப்படும் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து சுமார் 3 மணி நேரம் கழித்து அந்த விமானம் ஜெய்ப்பூருக்கு புறப்பட்டது. அதன்படி அந்த விமானம் பிற்பகல் 1.30 மணி அளவில் ஜெய்ப்பூரை சென்றடைந்தது.
அதற்கு பிறகு அவர் வாடகை கார் மூலம் அங்கிருந்து தனது சொந்த கிராமத்திற்கு சென்றார். எனினும் ரிதுகுமாரி அங்கு சென்று சேருவதற்குள், அவரது தாய் மாமாவின் இறுதிச்சடங்குகளை முடித்து, உடலை உறவினர்கள் அடக்கம் செய்துவிட்டனர். இவ்வளவு இன்னல்களுக்கு மத்தியில் வந்தும் தனது தாய் மாமாவின் முகத்தை இறுதியாக பார்க்க முடியவில்லை என அவர் வேதனையும், ஆதங்கமும் அடைந்தார்.