விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை; வெள்ளக்காடானது, பெங்களூரு


விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை; வெள்ளக்காடானது, பெங்களூரு
x

விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழையால் பெங்களூரு வெள்ளக்காடானது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சாலைகள் குளமாக மாறியதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

பெங்களூரு:

விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழையால் பெங்களூரு வெள்ளக்காடானது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சாலைகள் குளமாக மாறியதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

கனமழை

கர்நாடகத்தில் ஜூன் மாதம் இறுதியில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்கள், மலைநாடு மாவட்டங்களில் மழையின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. வடகர்நாடக பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தலைநகர் பெங்களூருவில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. காலை நேரத்தில் மழை பெய்யாமல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஆனால் இரவில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் 2 மணி முதல் பெங்களூருவில் மழை பெய்ய ஆரம்பித்தது. ராஜாஜிநகர், ஹெப்பால், எலகங்கா, மெஜஸ்டிக், விதான சவுதா, கப்பன் பார்க், பசவேஸ்வராநகர், உரமாவு, நாகரபாவி, ஜெயநகர், டொம்லூர், விஜயநகர், எச்.பி.ஆர். லே-அவுட், மடிவாளா, சாந்திநகர், இந்திராநகர், ஆர்.ஆர்.நகர் உள்பட நகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக ஆர்.ஆர்.நகர், சாந்திநகரில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை மக்கள் பாத்திரங்களில் பிடித்து இரவு முழுவதும் வெளியே ஊற்றி கொண்டே இருந்தனர். இதனால் தூக்கத்தை இழந்து மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

கார்கள், ஆட்டோ மீது மரம் விழுந்தது

உரமாவு பகுதியில் பெய்து வரும் கனமழையால் அங்கு உள்ள சாய் லே-அவுட்டை பகுதியை ஏற்கனவே வெள்ளம் சூழ்ந்து இருந்தது. நேற்று முன்தினம் விடிய, விடிய பெய்த கனமழையால் அந்த பகுதியில் 4 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர். சாய் லே-அவுட் 2-வது கிராசில் வசித்து வரும் மக்களில் பெரும்பாலோனார் தங்கள் வசித்து வந்த வீடுகளை காலி செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் மழை பெய்யும் போது சாய் லே-அவுட் பகுதியில் மழைநீர் தேங்கி நிற்பதாகவும், இதனை சரிசெய்ய மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது இல்லை என்று அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.

நாகரபாவி பகுதியில் பெய்த கனமழையால் வெளிவட்டசாலையில் சென்று கொண்டு இருந்த சரக்கு வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் படுகாயம் அடைந்தார். அவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுபோல நாகரபாவியில் இருந்து பெங்களூரு பல்கலைக்கழகம் செல்லும் சாலையில் ஒரு கார் சென்று கொண்டு இருந்தது. அந்த காரின் மீது ஒரு பெரிய மரம் முறிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த காரில் இருந்த 4 பேரும் உயிர் தப்பினர். கார் மீது மரம் விழுந்தது பற்றி அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் 4 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் அங்கு மாநகராட்சி அதிகாரிகள் வரவில்லை. 4 மணி நேரம் கழித்தே அங்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் காரின் மீது விழுந்த மரத்தை வெட்டி அகற்றினர். இதுபோல நந்தினி லே-அவுட்டில் உள்ள பொதுப்பணித்துறை குடியிருப்பிலும் ஒரு மரம் சாய்ந்து கார் மீது விழுந்தது. இதில் அந்த கார் சேதம் அடைந்தது. சாம்ராஜ்பேட்டையில் ஒரு ஆட்டோவின் மீது மரம் முறிந்து விழுந்தது.

இருசக்கர வாகனங்கள் மூழ்கின

எச்.பி.ஆர். லே-அவுட், சாந்திநகர், இந்திராநகர், ஜெயநகரில் சாலையில் மழைநீர் குளம் போல தேங்கி நின்றது. இதனால் வாகனங்கள் அந்த சாலையில் ஊர்ந்து சென்றன. இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் உண்டானது. சாந்திநகர் பகுதியில் மழைநீரில் சிக்கி 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், கார்கள் பழுதாகின. விலை உயர்ந்த பி.எம்.டபுள்யூ கார் ஒன்றும் மழைநீரில் சிக்கி பழுதானது.

அந்த காரை 4 பேர் சேர்ந்து தள்ளிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. மேலும் சாந்திநகரில் 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மழைநீரில் மூழ்கின. இதுதவிர நகரின் பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கி குளம் போல காட்சி அளித்தது. அந்த சாலைகளில் வாகனங்களை ஓட்டி செல்ல வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

130 டிரான்ஸ்பார்மர்கள் சேதம்

இதுபோல தாவணகெரே மாவட்டத்தில் பெய்த கனமழைக்கு 893 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. தட்சிண கன்னடா மாவட்டத்தில் கடந்த 48 மணி நேரத்தில் 30 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. கனமழைக்கு அந்த மாவட்டத்தில் 100 வீடுகள் சேதம் அடைந்து உள்ளன. வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தன. பாக்கு, ரப்பர் மழைநீரில் நாசமானது. 130 டிரான்ஸ்பார்மர்கள் சேதம் அடைந்து உள்ளன. பல்லாரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் சிருகுப்பா தாலுகா ராராவி கிராமத்தில் ஓடும் வேதவதி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

அந்த கிராமத்தில் ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தை நேற்று முன்தினம் இரவு ஒரு லாரி கடக்க முயன்றது. ஆனால் ஆற்று வெள்ளத்தில் அந்த லாரி அடித்து செல்லப்பட்டு கவிழ்ந்தது. லாரியை பிடித்து கொண்டு உயிருக்கு போராடிய டிரைவர், கிளீனரை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டனர். ஹாவேரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பல ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.

படகுகள் சேதம்

பெலகாவி மாவட்டம் ராமதுர்காவில் பெய்த கனமழையால் ராமதுர்கா போலீஸ் நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் போலீஸ் நிலையத்தில் இருந்த ஆவணங்கள் தண்ணீரில் நனைந்தன. பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தாலுகாவில் கனமழைக்கு ஏரிகள், குளங்கள் நிரம்பி உள்ளன. கலபுரகி மாவட்டம் கமலாபுரா தாலுகா ஹல்லஅக்கனா கிராமத்தில் ஏரி உடைந்து தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது.

ராய்ச்சூர் மாவட்டம் சிரவாரா தாலுகா ஹள்ளிஒசூர் கிராமத்தில் ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டு இருந்த ஒரு ஆட்டோ தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. அந்த ஆட்டோவையும், அதன் டிரைவரையும் கிராம மக்கள் மீட்டனர். உத்தர கன்னடா மாவட்டம் பட்கல்லில் பெய்து வரும் கனமழையால் 30-க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்து உள்ளன.


Next Story