வடமாநிலங்களில் வெள்ளம், கனமழை; இமாசல பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 88 ஆக உயர்வு
இமாசல பிரதேசத்தில் கனமழையால் பலி எண்ணிக்கை 90-ஐ நெருங்கி உள்ளது. கடந்த 4 நாட்களில் 39 பேர் உயிரிழந்து உள்ளனர்.
புதுடெல்லி,
இமாசல பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் தொடர் கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் அதிகரித்து காணப்படுகின்றன. இமாசல பிரதேசத்தில் கனமழையால் பலி எண்ணிக்கை 90-ஐ நெருங்கி உள்ளது. கடந்த 4 நாட்களில் 39 பேர் உயிரிழந்து உள்ளனர்.
உத்தரகாண்டில் தனவுரி, ருத்ரபிரயாக் மற்றும் கான்பூர் உள்ளிட்ட சில பகுதிகளில் இன்றும், நாளையும் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. ரூர்கி, லக்சார் மற்றும் பகவான்பூர் ஆகிய பகுதிகளில் வருகிற 15 மற்றும் 16 ஆகிய நாட்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதனால், 300 சாலைகள் வாகன போக்குவரத்து வசதியின்றி முடங்கியுள்ளன. டேராடூன், அரித்துவார், பவுரி மற்றும் பிற பகுதிகளில் கனமழை பெய்ய கூடும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
டெல்லியில் ஐ.டி.ஓ., காஷ்மீரி கேட் மற்றும் கீதா காலனி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. யமுனை ஆற்றில் நீர்மட்டம் நேற்று மதியம் 1 மணியளவில் மிக அதிக அளவாக 207.49 மீட்டர் உயரத்திற்கு நீர்மட்டம் உயர்ந்தது.
இந்நிலையில், யமுனை ஆற்றில் இன்று காலை 7 மணியளவில் வெள்ளப்பெருக்கால் நீர்மட்டம் 208.46 மீட்டராக உயர்ந்து உள்ளது.
இதனை அடுத்து அரியானாவின் ஹத்னிகுண்டு பகுதியில் உள்ள தடுப்பணையில் இருந்து நீர் திறந்து விடப்படுகிறது. அபாய அளவை விட 3 மீட்டர் உயரத்தில் நீர்மட்டம் உள்ளது.
பஞ்சாப் மற்றும் அரியானாவில் 5 நாட்களாக கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. நேற்று ஒரே நாளில் 6 பேர் கனமழைக்கு உயிரிழந்து உள்ளனர்.
இதனால் இந்த மாநிலங்களில் மொத்த பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்து உள்ளது. இவற்றில் அரியானாவில் 10 பேர் அடங்குவார்கள். தொடர்ந்து கனமழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.