விண்ணை தொடும் பூக்களின் விலை; இல்லத்தரசிகள், வியாபாரிகள் கருத்து


விண்ணை தொடும் பூக்களின் விலை; இல்லத்தரசிகள், வியாபாரிகள் கருத்து
x

விண்ணை முட்டும் பூக்களின் விலை உயர்வு குறித்து இல்லத்தரசிகள், வியாபாரிகள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

பெங்களூரு:

விண்ணை முட்டும் பூக்களின் விலை உயர்வு குறித்து இல்லத்தரசிகள், வியாபாரிகள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

பண்டிகைகளில் பூக்கள்

பெங்களூரு நகரவாசிகள் விழாக்கள், பண்டிகைகள், கோவில் திருவிழாக்களை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். இதுபோன்ற பண்டிகை, விழாக்களில் முக்கிய இடம் பிடிப்பது பூக்கள் தான். பண்டிகை வந்து விட்டால் வீடுகள், கோவில்களில் பூக்களால் ஆன மாலைகளை சாமிக்கு அணிவித்து பூஜை செய்வது வழக்கம்.

இதற்கு உதாரணம் விஜயதசமி, ஆயுத பூஜைக்கு பின்பு பெங்களூருவில் தினமும் குவியும் குப்பைகளை காட்டிலும் கூடுதலாக 4 முதல் 5 டன் குப்பைகள் சேர்ந்திருந்தது. இவை பூக்கள், வாழை கன்றுகள் உள்ளிட்ட பூஜை பொருட்களே ஆகும். பூக்களின் தேவை அதிகமாக இருப்பதால், அதன் விலையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது.

விண்ணை முட்டும் விலை

குறிப்பாக பெண்கள் விரும்பி சூடி கொள்ளும் மல்லிகை, கனகாம்பரம் பூக்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. பண்டிகை நாட்களில் மல்லிகை, கனகாம்பரம், பிச்சிப்பூ உள்ளிட்ட பூக்களின் விலை அதிகமாக இருப்பதால், மல்லிகையை போன்றே இருக்கும் காக்டா என்ற ஒரு வகையான பூவை வாங்கி சூடி கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இந்த பூ மல்லிகைப்பூ போன்ற இருந்தாலும், அதை போன்ற வாசம் மட்டும் வீசாது. இருந்தாலும் வேறு வழியின்றி பூக்களை வாங்கி சூடி கொள்ளும் நிலை உள்ளது.

அதே நேரத்தில் பெங்களூருவில் வசிக்கும் இளம்பெண்கள் யாரும் மல்லிகை, கனகாம்பரம் போன்ற பூக்களை வாங்கி சூடிக் கொள்ள ஆர்வமும் காட்டுவதில்லை. திருமணமான பெண்கள் மட்டுமே பூக்கள் சூடுவதற்கு விரும்புகின்றனர். சம்பங்கி பூக்களின் விலை குறைவாக இருப்பதால், பெரும்பாலும் கோவில்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். பெங்களூரு நகரில் உள்ள ஒவ்வொரு கோவில்களுக்கு முன்பாக உள்ள கடைகளில் சம்பங்கி, ரோஜா பூக்கள் அதிகம் விற்கப்பட்டு வருகிறது.

சிட்டி மார்க்கெட்டில் பூ வியாபாரம்

பெங்களூரு நகரில் மொத்த விலைக்கு சிட்டி மார்க்கெட்டில் தான் பூக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பண்டிகை நாட்களில் சிட்டி மார்க்கெட்டில் பூக்கள் வாங்க மக்கள் கூட்டம் அலை மோதும். அதற்கு ஏற்றார் போல் நூற்றுக்கணக்கான கடைகள், நூற்றுக்கணக்கான வியாபாரிகள் இருக்கின்றனர். இதுபோல், மடிவாளா, மல்லேசுவரம், விஜயநகர், சுங்கதகட்டே, தாசரஹள்ளி உள்ளிட்ட பகுதிகளிலும் பூ மார்க்கெட்டுகள் உள்ளன.பெங்களூருவுக்கு ஒசக்கோட்டை, வர்த்தூர், ஓசூரில் இருந்து ரோஜா பூக்கள் வருகிறது. தமிழ்நாடு கிருஷ்ணகிரியில் இருந்து மல்லிகை, கனகாம்பரம் பூக்களும், சேலத்தில் இருந்து சம்பங்கி பூக்ககளும், பெங்களூரு புறநகர் மாவட்டம், கோலார், சிக்பள்ளாப்பூரில் இருந்து சம்பங்கி, சூரிய காந்தி உள்ளிட்ட பூக்களும் தினமும் மார்க்கெட்டுகளுக்கு வருகிறது.

பூக்களின் வரத்து குறைவு

பண்டிகை நாட்களில் நாட்களில் பூக்களின் விலை விண்ணை தொடும் அளவுக்கு சென்று விடுகிறது. இதற்கு முக்கிய காரணம் பூக்களின் வரத்து குறைவாக இருப்பதுடன், தேவை அதிகமாக உள்ளது. தற்போது குளிர் அதிகமாக இருப்பதால் மல்லிகை, கனகாம்பரம், பிச்சி உள்ளிட்ட பூக்கள் விளைச்சல் இல்லாமல் போய் விடுவதால் விலை அதிகமாக இருப்பதாக சிட்டி மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். விலை உயர்வு காரணமாக பூக்களை வாங்குவதில் மக்களும் ஆர்வம் காட்டுவதில்லை என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வியாபாரிகள், இல்லத்தரசிகள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதுபற்றிய விபரம் வருமாறு:-

கிலோ ரூ.1,000-க்கு விற்பனை

சிட்டி மார்க்கெட்டில் மொத்த விலைக்கு பூக்கள் விற்கும் குமரேசன் கூறுகையில், "பெங்களூருவில் தற்போது பூக்கள் விலை சற்று அதிகமாக தான் உள்ளது. சங்கராந்தி (பொங்கல்) வரை இந்த விலை உயர்வு இருக்கும். அதன்பிறகு, 2 மாதத்திற்கு கன்னட பண்டிகைகள் எதுவும் இல்லை. முகூர்த்தமும் இல்லை. முகூர்த்தம் இருந்தால் தான் பூக்களின் விலை அதிகமாக இருக்கும். சீசன் குறைந்து விட்டால், மல்லிகை, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்கள் கிலோ ரூ.300 முதல் ரூ.400 வரை தான் விற்கப்படும்.

தற்போது புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகள் இருப்பதால், வரத்து குறைவாக இருப்பதாலும் ரூ.800 முதல் ரூ.1,000 வரையும், சில நேரங்களில் ரூ.1000 முதல் ரூ.1,200 வரையும் பூக்கள் விற்கப்படும். சம்பங்கி விலை தற்போது குறைவாக தான் உள்ளது" என்றார்.

குளிர்காலம் என்பதால்...

சிட்டி மார்க்கெட்டில் ரோஜா பூக்கள் விற்கும் அசோக், "எனது கடையில் டச் ரோஜாக்கள் (பிளாக் மேஜிக்) ஒரு கட்டு ரூ.50-க்கு விற்கிறேன். ஒரு கட்டுவில் 20 ரோஜாக்கள் இருக்கும். ரோஜா பூக்களின் மாலை ரூ.200 முதல் ரூ.800 வரை விற்கப்படுகிறது. ரோஜாக்கள் ஓசூரில் இருந்து கிடைப்பதுடன், பெங்களூரு புறநகரில் இருந்தே கிடைத்து விடுகிறது. முகூர்த்தம், பண்டிகை காலத்தில் பூக்களின் விலை அதிகமாகி விடும்.

இதற்கு காரணம் தேவை அதிகமாக இருக்கும்.குளிர்காலம் என்பதால் மல்லிகை, கனகாம்பரம் பூக்கள் விளைச்சல் குறைவு என்பதால், அதன் விலை அதிகமாக இருக்கிறது. பூக்களின் வரத்துகளை பொருத்து விலை உயரும், குறையும். நிலையாக பூக்களின் விலையை நிர்ணயிக்க முடியாது" என்றார்.

கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை எம்.ஜி. மார்க்கெட்டிற்கு பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயி ராஜா கூறுகையில், "கடந்த பல மாதங்களாக மாநிலத்தில் எப்போதும் இல்லாத அளவில் கனமழை பெய்து வந்தது. அதனால் பூக்கள் முற்றிலும் வெள்ள நீரில் அழுகி நாசமாயின. அதனால் பெருவாரியான விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. அத்துடன், பூக்கள் இல்லாத நிலை ஏற்பட்டது. தற்போது பூக்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. அது வளர்ந்து மீண்டும் பூக்க குறைந்தது 2 மாதங்கள் ஆகும். அதுவரை பூக்களின் விலை உயரத்தான் செய்யும். மேடான பகுதியில் பூக்களை சாகுபடி செய்த விவசாயிகள் மட்டும் அவற்றை அறுவடை செய்து மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக அனுப்பி வருகின்றனர். இதனால் முகூர்த்த நாட்கள், பண்டிகை காலங்களில் பூக்கள் விலை உயர்ந்து வருகிறது" என்றார்.

ராபர்ட்சன்பேட்டை பூ வியாபாரி ஆர்.அருண் கூறுகையில், "மழை வெள்ள பாதிப்பு காரணமாக பூக்கள் சாகுபடி வெகுவாக பாதித்தது. அதனால், மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. கோலார் தங்கவயலில் மட்டும் இன்றி ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து கோலார் தங்கவயலுக்கு விற்பனைக்காக பூக்கள் கொண்டு வரப்படுகிறது. ஆனால், வியாபாரிகளிடம் இடைத்தரகர்கள் புகுந்து குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதால் ஒரு நாள் அதிகமான விலையும் ஒரு நாள் குறைவான விலைக்கும் வாங்கி நாங்கள் பூக்களை விற்பனை செய்கிறோம். அதனால் வியாபாரிகளான எங்களுக்கும், பொதுமக்களுக்களுக்கும், விவசாயிகளுக்கும் தான் பாதிப்பு. இந்தநிலை மாற பூக்கள் விற்பனை செய்வதில் இடைத்தரகர்களின் தலையீட்டை அரசு அதிகாரிகள் தடுக்கவேண்டும்" என்றார்.

எப்போதும் விலை அதிகம் தான்

இதுகுறித்து ராஜாஜிநகரை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் கூறும் போது, "மல்லிகை, கனகாம்பரம் பூக்களின் விலை எப்போதும் அதிகமாக தான் இருந்த படியாக உள்ளது. ஒரு முழம் சில நேரங்களில் ரூ.100-க்கு விற்கப்படுவதால், அதனை வாங்க முடிவதில்லை. தற்போது இளம்பெண்கள் யாரும் பூக்கள் சூடிக் கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களுக்கு மல்லிகை, கனகாம்பரம் பூக்கள் விலை பற்றி கவலைப்படுவதில்லை. சம்பங்கி பூக்களின் விலை குறைவாக இருப்பதால், தற்போது பூஜைக்கு பயன்படுத்துகிறோம். பண்டிகை வந்து விட்டால் சம்பங்கி பூக்களின் விலையையும் கண்மூடிக் கொண்டு ஏற்றி விடுவார்கள்" என்றார்.

கோலார்தங்கவயலை சேர்ந்த இல்லத்தரசி ஜெ.சுமதி ஜெகதீசன் கூறுகையில், "தற்போது மார்கழி மாதம், வைகுண்ட ஏகாதசி மற்றும் புத்தாண்டு அதை தொடர்ந்து பொங்கல் பண்டிகை போன்றவை வருகின்றன. பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால், பூக்களின் விலை உயர்ந்து வருகிறது. மார்கழி மாதத்தில் கோவில்களில் பூஜை செய்வதற்கும், புத்தாண்டில் பூக்களை வாங்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. தற்போது கடவுளுக்கு முக்கிய பூஜை பொருளாக திகழ்வது பூக்கள் மட்டுமே. அந்த பூவை வைத்து பூஜை செய்ய முடியாத அளவுக்கு பூக்களின் விலை உயர்ந்துள்ளது வருகிறது" என்றார்.


Next Story