மத்திய பிரதேசத்தில் குழந்தைகள் கட்டாய மதமாற்றம்; 10 பேர் மீது பாய்ந்தது வழக்கு


மத்திய பிரதேசத்தில் குழந்தைகள் கட்டாய மதமாற்றம்; 10 பேர் மீது பாய்ந்தது வழக்கு
x

மத்திய பிரதேசத்தில் குழந்தைகளின் கட்டாய மதமாற்றம் நடக்கிறது என வந்த புகாரை அடுத்து 10 பேர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.



தமோ,


மத்திய பிரதேசத்தின் தமோ மாவட்டத்தில் உள்ள அனாதை இல்லங்கள் மற்றும் கிறிஸ்தவ மிசனெரிகளால் நடத்தப்படும் குழந்தைகளின் காப்பகம் ஆகியவற்றிற்கு, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான ஆணையத்தின் தலைவர் பிரியங் கனூங்கோ நேற்றிரவு திடீர் ஆய்வுக்காக சென்றுள்ளார்.

அவரது வருகை பற்றி மாவட்ட அதிகாரிகளுக்கு மட்டும் தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. அவருடன் மத்திய பிரதேச மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான ஆணையத்தின் உறுப்பினர் ஓம்கார் சிங் மக்ராம் மற்றும் உயரதிகாரிகள் பலர் சென்றுள்ளனர்.

இந்த ஆய்வில், கிறிஸ்தவ மிசனெரிகளால் நடத்தப்படும் குழந்தைகளின் காப்பகத்தில் மதமாற்றம் நடந்து உள்ளது என கனூங்கோ குற்றச்சாட்டு கூறியுள்ளார். திந்தூரி மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒரு குழந்தையை சாமியார் ஆக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன என அவர் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் அளித்துள்ள புகாரின் பேரில் போடப்பட்ட எப்.ஐ.ஆர். பதிவில், கத்னி பைபாஸ் சாலையில் அமைந்த கிறிஸ்தவ மிசனெரி நடத்தும் குழந்தைகள் விடுதிக்கு சென்றபோது, நீண்ட நேரம் நுழைவு வாசலில் காக்க வைக்கப்பட்டோம். என்னுடன் உயரதிகாரிகள் உடன் வந்திருந்தனர். எனினும் கதவு திறக்கப்படவில்லை என கூறியுள்ளார்.

இது குழந்தைகளின் மத சுதந்திரத்தில் மீறும் செயலாகும். மத்திய பிரதேசத்தில் மகளிர் மற்றும் குழந்தை வளர்ச்சி துறையானது அலட்சியத்துடன் உள்ளது. உள்ளூர் அதிகாரிகளும் அப்படியே உள்ளனர். இதுபற்றி விசாரிக்க போலீசில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றும் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து மிசனெரியின் 10 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. விசாரணை நடந்து வருகிறது என கூடுதல் போலீஸ் சூப்பிரெண்டு சிவகுமார் சிங் கூறியுள்ளார்.

எனினும், விடுதியின் முதல்வர் திரீஜா மிஸ் கூறும்போது, குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. விடுதி குழந்தைகள் மீது கட்டுப்பாடு எதுவும் இல்லை. இந்து, முஸ்லிம் குழந்தைகள் தங்களது மதங்களை பின்பற்றி, வழக்கம்போல் வழிபடுகின்றனர் என கூறியுள்ளார்.

ஞாயிற்று கிழமைகளில் குழந்தைகளை வெளியே செல்ல அனுமதிப்பதில்லை. அதனால், பாதுகாப்பு காரணங்களுக்காக கதவு திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டது என அவர் கூறியுள்ளார்.

மத்திய பிரதேசத்தின் ரெய்சன் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளின் காப்பகம் ஒன்றிற்கு, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான ஆணையத்தின் தலைவர் பிரியங் கனூங்கோ சமீபத்தில் ஆய்வுக்காக சென்றுள்ளார்.

இதன்பின்னர் அவர் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், இந்த ஆய்வில் ஒரு விசயம் வெளிவந்து உள்ளது. காப்பகத்தில் உள்ள 3 குழந்தைகளின் மதம் மற்றும் அவர்களுடைய பெயர்கள் கூட மாற்றம் செய்யப்பட்ட விவரம் தெரிய வந்து உள்ளது.

அவர்களின் பெயரில் புதிய ஆவணங்கள் மற்றும் மதநம்பிக்கைகள் உருவாக்கப்பட்டு இருந்தன. இவற்றை காப்பகத்தினை நடத்தி வருபவர் யாரோ சிலருக்காக செய்துள்ளார் என தெரிவித்து உள்ளார்.

இதற்கு முன்பு அவர், ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் இளம்பெண்களை விலைக்கு வாங்கி, விற்கும் அவலம் பற்றி தெரிய வந்து அதற்கான விசாரணைக்கு சென்றுள்ளார்.

அந்த இளம்பெண்கள் கட்டாயத்தின்பேரில் விபசாரத்தில் தள்ளப்பட்ட குற்றச்சாட்டும் உள்ளது என அவர் தெரிவித்து உள்ளார். சென்ற இடத்தில், சிறுமிகளின் மற்ற குடும்ப உறுப்பினர்கள் பலரையும் வீடுகளில் காணவில்லை. அவர்களும் விபசாரத்தில் தள்ளப்பட்டு இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

இதன்படி, அந்த கிராமத்தில் இருந்த 27 இளம்பெண்கள் காணாமல் போனது தெரிய வந்துள்ளது என அவர் கூறியுள்ளார். 2019-ம் ஆண்டு இந்த கிராமத்தில் பெரிய அளவில், கும்பலாக பெண்களை விபசாரத்திற்கு விற்கும் அவலங்கள் நடந்தது தெரிய வந்துள்ளது என்றும் பிரியங் டுவிட்டரில் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளார்.


Next Story