டெல்லியில் பிரதமர் மோடியுடன் 'ஆசியான்' நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் சந்திப்பு


டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஆசியான் நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் சந்திப்பு
x

ஆசியான் அமைப்பு உறுப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர்.

புதுடெல்லி,

தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேஷியா, தாய்லாந்து, வியட்நாம், லவோஸ், புரூனே, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், மலேசியா, கம்போடியா, மியான்மர் ஆகிய 10 நாடுகள் இணைந்து ஆசியான் அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்புடன் இந்தியா உறவுகளை ஏற்படுத்திக் கொண்ட 30-வது ஆண்டு நினைவு இந்த ஆண்டு அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி டெல்லியில் 2 நாள் சிறப்பு மாநாடு ஒன்றை இந்தியா நடத்துகிறது. இதில் பங்கேற்பதற்காக ஆசியான் அமைப்பின் உறுப்பு நாடுகளை சேர்ந்த வெளியுறவு மந்திரிகள் இந்தியா வந்துள்ளனர்.

அவர்கள் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். அப்போது இரு தரப்புக்கும் இடையே பல்வேறு அம்சங்களில் ஒத்துழைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த சந்திப்பின்போது வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பை தொடர்ந்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் தளத்தில், 'இந்தியா-ஆசியான் ஒத்துழைப்பின் 30-வது ஆண்டை நாம் கொண்டாடி வரும் நிலையில், ஆசியான் நாட்டு வெளியுறவு மந்திரிகள் மற்றும் பிரதிநிதிகளுடன் ஒரு சிறப்பான கலந்துரையாடல் அமைந்தது' என குறிப்பிட்டு இருந்தார்.

இதைப்போல வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தனது டுவிட்டர் தளத்தில், 'இந்திய-ஆசியான் நட்பில் ஒரு மைல்கல். ஆசியான்-இந்தியா வெளியுறவு மந்திரிகளின் சிறப்பு சந்திப்பை இந்தியா நடத்துகிறது. இதில் பங்கேற்கும் வெளியுறவு மந்திரிகள் பிரதமர் மோடியை சந்தித்தனர்' என்று கூறியிருந்தார்.

இந்தியா-ஆசியான் நாட்டு வெளியுறவு மந்திரிகள் மாநாட்டில் ஜெய்சங்கர் தொடக்க உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், 'இந்தோ-பசிபிக் பகுதியில் ஒரு மைய பங்கை கொண்ட வலுவான, ஒருங்கிணைந்த மற்றும் வளமான ஆசியானை இந்தியா முழுமையாக ஆதரிக்கிறது' என்று தெரிவித்தார்.

மேலும் உக்ரைன் போரால் உலகம் முழுவதும் எழுந்துள்ள உணவு, எரிசக்தி, உரங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வும், வினியோக சங்கிலிகளில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.


Next Story