காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரன்


காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரன்
x

பா.ஜ.க. தலைமையின் வழிகாட்டுதலின்படி செயல்படுவேன் என விபாகர் சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து அமைத்துள்ள 'இந்தியா' கூட்டணி கட்சிகள் தேர்தல் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்த சூழலில், காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் விலகி வருவது அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. அந்தவகையில், கடந்த மாதம் முரளி தியோரா மகன் மிலிந்த் தியோரா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் சேர்ந்தார். அதேபோல், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மந்திரியாக இருந்த பாபா சித்திக்கும் விலகினார்.

இதையடுத்து மராட்டிய மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியும், போகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அசோக் சவான் (வயது 65) காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி நேற்று பா.ஜ.க.வில் இணைந்தார்.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் விபாகர் சாஸ்திரி காங்கிரசில் இருந்து விலகி இன்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். உத்தர பிரதேச துணை முதல்-மந்திரி பிரஜேஷ் பதக் முன்னிலையில் விபாகர் சாஸ்திரி பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், "எனக்காக பா.ஜ.க.வின் கதவுகளைத் திறந்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி, நட்டா, மத்திய மந்திரி அமித்ஷா, உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் பிரஜேஷ் பதக் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது தாத்தா லால் பகதூர் சாஸ்திரியின் பார்வையை முன்னெடுத்துச் செல்ல எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன். கட்சித் தலைமையின் வழிகாட்டுதலின்படி செயல்படுவேன். இந்தியா கூட்டணிக்கு சித்தாந்தம் இல்லை, மோடியை அகற்றுவதே அவர்களின் நோக்கமாக உள்ளது. காங்கிரசின் சித்தாந்தம் என்ன என்பதை ராகுல் காந்தி சொல்ல வேண்டும்" என்றார்.


Next Story