இலவச மின்சார திட்டத்தில் பயன்பெற வருகிற 15-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்; மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பேட்டி


இலவச மின்சார திட்டத்தில் பயன்பெற வருகிற 15-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்; மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பேட்டி
x

இலவச மின்சார திட்டத்தின் பயன்பெற வருகிற 15-ந் தேதி முதல் விண்ணப் பிக்கலாம் என்றும், இந்த திட்டத்தால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.13 ஆயிரம் கோடி செலவாகும் என்றும் மின்சாரத்துறை மந்திரி கே.ஜே. ஜார்ஜ் கூறியுள்ளார்.

பெங்களூரு:

இலவச மின்சார திட்டத்தின் பயன்பெற வருகிற 15-ந் தேதி முதல் விண்ணப் பிக்கலாம் என்றும், இந்த திட்டத்தால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.13 ஆயிரம் கோடி செலவாகும் என்றும் மின்சாரத்துறை மந்திரி கே.ஜே. ஜார்ஜ் கூறியுள்ளார்.

கர்நாடக மின்சாரத்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

இணைக்க வேண்டும்

'கிரகஜோதி' திட்டத்தின் கீழ் இலவச மின்சார திட்டத்தை அரசு அமல்படுத்துகிறது. இது வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. வாடகை வீடுகளில் வசிப்போருக்கும் இதன் சலுகை கிடைக்கும். அவர்கள் வாடகை ஒப்பந்த பத்திரம், குத்தகை பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். அத்துடன் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.

வாக்காளர் அடையாள அட்டை வழங்க வேண்டும். ஒருவேளை இந்த ஆவணம் இல்லாவிட்டால், கர்நாடகத்தில் வசிப்பதற்கான வீட்டு முகவரியை உறுதி செய்யும் ஏதாவது ஒரு சான்றிதழை வழங்கினால் போதுமானது. வீட்டின் உரிமையாளர் முறையாக சொத்து வரி செலுத்தி இருக்க வேண்டும். சட்டவிரோதமான கட்டிடமாக இருந்தாலும், முறைப்படி மின் இணைப்பு பெற்றிருந்தால் இந்த திட்டத்தின் பயனை பெற முடியும்.

2 லட்சம் வீடுகள்

சட்டவிரோத கட்டிடம் என்றால் அதை குறிப்பிட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் பார்த்துக் கொள்ளும். இதுவரை ஒருவர் 200 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தி இருந்தால், இனி அவர் 200 யூனிட்டுக்கு கீழ் மின்சாரத்தை பயன்படுத்தினால் அத்தகையவருக்கு இந்த சலுகை கிடைக்காது. ஏனெனில் கடந்த 12 மாதங்களின் சராசரி கணக்கிட்டு இந்த பயனை வழங்குகிறோம்.

அவர் இந்த சலுகையை பெற விரும்பினால் அடுத்த 12 மாதங்கள் 200 யூனிட்டுக்கு கீழ் மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும். கர்நாடகத்தில் 2.16 கோடி வீட்டு மின் இணைப்புகள் உள்ளன. இதில் 2.14 கோடி வீடுகள் 200 யூனிட்டுக்கு கீழ் மின்சாரத்தை பயன்படுத்துகின்றன. இந்த வீடுகளின் சராசரி மாத மின் நுகர்வு என்பது 53 யூனிட்டாக உள்ளது. மீதமுள்ள 2 லட்சம் வீடுகள் மட்டுமே 200 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்துகின்றன.

இலவச மின்சாரம்

மின் கட்டணத்தை நாங்கள் உயர்த்தவில்லை. முந்தைய அரசு இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு நாங்கள் பொறுப்பாக மாட்டோம். மேலும் இந்த கட்டண உயர்வு, பெரும்பாலான வீடுகளுக்கு பொருந்தாது. ஏனெனில் அவா்களுக்கு இலவச மின்சாரம் கிடைக்க போகிறது. இந்த இலவச மின்சார திட்டத்தின் பயன் பெற வருகிற 15-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

மாநில அரசின் சேவா சிந்து இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் அதிகம் பேர் விண்ணப்பித்தால், இணைய 'சர்வர்' சரியாக செயல்படாது எனக்கருதி, 5 மடங்கு கூடுதல் 'சர்வர்' திறன்களை ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் ஒரு நாளைக்கு 10 லட்சம் பேர் விண்ணப்பிக்க முடியும். வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் மின் இணைப்பு எண், ஆதார் அட்டை ஆகியவற்றுடன் வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், வாடகை ஒப்பந்த பத்திரம், குத்தகை பத்திரம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை வழங்க வேண்டும். அதில் அவர்கள் வசிக்கும் வீட்டின் முகவரி இருக்க வேண்டும்.

ரூ.13 ஆயிரம் கோடி

வருமான வரி செலுத்துகிறவர்கள், ஜி.எஸ்.டி. செலுத்துபவர்கள் யாராக இருந்தாலும் சரி, இந்த திட்டத்தின் சலுகையை பெற முடியும். இந்த இலவச மின்சார திட்டத்திற்கு ஆண்டுக்கு சுமார் ரூ.13 ஆயிரம் கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.

இந்த பேட்டியின்போது மின்சாரத்துறை முதன்மை செயலாளர் கவுரவ்குப்தா, பெங்களூரு மின்சார வினியோக நிறுவன நிர்வாக இயக்குனர் மகந்தேஷ் பீளகி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Next Story