அசாமில் கனமழை, நிலச்சரிவு: சாலைகள், பாலங்கள் பயங்கர சேதம்
அசாம் மாநிலத்தில் கனமழை, நிலச்சரிவின் காரணமாக, அங்குள்ள சாலைகள் மற்றும் பாலங்கள் பயங்கர சேதமடைந்துள்ளது.
கவுகாத்தி,
அசாம் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கவுகாத்தியில் இரண்டாவது நாளாக பல்வேறு பகுதிகளில் பெய்துவரும் இடைவிடாத மழைக்கு பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மேலும், நகரின் பெரும்பாலான பகுதிகளில் கடும் நீர் தேங்கியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், நிலச்சரிவுகளால் கீதாநகர், சோனாபூர், கலாபஹார் மற்றும் நிஜரபார் பகுதிகளில் உள்ள பாதைகளை அடைக்கப்பட்டுள்ளது.
கனமழையால் நகரின் பல பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது - இவற்றில் அனில் நகர், நபி நகர், ராஜ்கர் இணைப்பு சாலை, ருக்மிணிகான், ஹடிகான் மற்றும் கிருஷ்ணா நகர் ஆகியவை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள தேசிய பேரிடர் மீட்பு பணியாளர்கள், மக்களை மீட்பதற்காக படகுகளைப் பயன்படுத்தி, இன்னும் வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் சிக்கியுள்ளவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குகிறார்கள் என்று அந்த அதிகாரி கூறினார்.
மேலும், வானிலை மையம் அசாம் மற்றும் மேகாலயாவிற்கு 'ரெட் அலர்ட்' விடுத்துள்ளது. வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 'ஆரஞ்சு எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்படக்கூடிய இடங்களில் உள்ள மக்களை அருகிலுள்ள அறிவிக்கப்பட்ட நிவாரண முகாம்களுக்கு மாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து கல்வி நிறுவனங்களும் மே 17 வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.