மங்களூருவில் இருந்து டெல்லி, கோவைக்கு விமான சேவை
மங்களூருவில் இருந்து டெல்லி, கோவைக்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
மங்களூரு;
டெல்லிக்கு நேரடி விமான சேவை
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு பஜ்பே பகுதியில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து துபாய், யூ.ஏ.இ. நாடுகளுக்கும், மும்பை, பெங்களூருவுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் புனே வழியாக டெல்லிக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மங்களூருவில் இருந்து தலைநகர் டெல்லிக்கு நேரடி விமான சேவை தொடங்க வேண்டும் என்று கடலோர மாவட்ட மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி நேற்று முதல் மங்களூருவில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானம் 77 பயணிகளுடன் மங்களூருவுக்கு வந்தது. பின்னர் 140 பயணிகளுடன் இண்டிகோ விமானம் மங்களூருவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றது.
மக்கள் மகிழ்ச்சி
இந்த விமானம் வாரத்தில் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளை தவிர மற்ற 4 நாட்கள் இயங்குகிறது. டெல்லியில் இருந்து காலை 7.40 மணிக்கு புறப்படும் விமானம் மங்களூருவுக்கு காலை 10.15 மணிக்கு வருகிறது. பின்னர் மங்களூருவில் இருந்து காலை 10.45 மணிக்கு புறப்படும் விமானம் டெல்லிக்கு மதியம் 1.20 மணிக்கு சென்றடைகிறது.
மங்களூரு-டெல்லி இடையே நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளதால் கடலோர மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவைக்கு...
இதேபோல், மங்களூருவில் இருந்து தமிழ்நாடு கோவைக்கும் விமான சேவை நேற்று முதல் தொடங்கி உள்ளது. அதாவது மும்பையில் இருந்து கோவைக்கு செல்லும் கோ பர்ஸட் விமானம், மங்களூரு வழியாக இயக்கப்பட உள்ளது. இந்த விமானம் மும்பையில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு மங்களூருவுக்கு வருகிறது.
அங்கிருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு மதியம் 2.15 மணிக்கு சென்றடைகிறது. இந்த விமானம் மதியம் 2.50 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு மங்களூரு வழியாக மாலை 4.50 மணிக்கு மும்பையை சென்றடைகிறது.